'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-04 20:49 GMT

குறைந்த அழுத்த மின்சாரம்

சிவகங்கை மாவட்டம் குமாரபட்டி கிராமத்தில் கடந்த சில நாட்களாக குறைந்த அழுத்தத்தில் மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் போன்ற மின்சாதன பொருட்கள் அனைத்தும் அடிக்கடி பழுதடைகிறது. இதனால் இப்பகுதி பெண்கள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் நிலவும் குறைந்தழுத்த மின்வினியோகத்தை சரிசெய்ய வேண்டும்.

பாலா, குமாரபட்டி.

அடிப்படை வசதி

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே ஏரகாடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 30 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் சரியான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, விளையாட்டு மைதானம் கிடையாது. இதனால் இந்த பள்ளியில் கல்வி பயில மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாந்தகுமாரி, ஏரகாடு.

போக்குவரத்து நெரிசல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பழைய பஸ் நிலையம், செக்காலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இந்த பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலில் சிக்கி வாகனங்களை இயக்க முடியாமல் அவதி அடைகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பகுதியில் மாற்றுப்பாதை அமைத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

பிரவீன், சிவகங்கை

தேங்கி நிற்கும் கழிவுநீர்

ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் பஞ்சாயத்து தேவேந்திரன் நகர் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீரானது நிரம்பி சாலையில் தேங்கி நிற்கிறது. தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி அப்பகுதியின் சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது. மேலும் தொற்றுநோய் பரவ வாய்ப்பு நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமர், அச்சுந்தன்வயல்.

கண்காணிப்பு கேமரா அமைக்கப்படுமா?

மதுரை கப்பலூர் மேம்பாலத்தில் வாகனங்கள் அதிவேகத்திலும் விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் செல்கின்றன. மேலும் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்த பாலத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாத காரணத்தால் விபத்து ஏற்படுத்தும் வாகனங்களை கண்டறிய முடியவில்லை. எனவே இந்த பகுதியில் நடக்கும் விபத்தினை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயக்குமார், திருமங்கலம்.

நாய்கள் தொல்லை

மதுரை தவிட்டுச்சந்தை, அழகர்சாமி ரோடு, மீனாட்சிபுரம் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நாய்கள் சாலைகளில் நடந்து செல்பவர்களை பயமுறுத்துவதுடன் வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்துக்களையும் ஏற்படுத்துகிறது. இரவு நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கே அச்சப்படுகின்றனர். எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோகன், மதுரை.

தரம் உயா்த்த வேண்டும்

விருதுநகர் மாவட்டம் ராஜபாைளயம் அருகே சேத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இ்ங்கு போதிய அளவில் மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் சிறிய நோய்களுக்குகூட சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சேத்தூர்.

நோய் பரவும் அபாயம்

மதுரை பங்கஜம் காலனி பகுதியில் கழிவுநீா் கால்வாய் தூா்வாரபடாமல் உள்ளது. இதனால் குப்பைகள் மற்றும் செடிகள் வளர்ந்து கழிவுநீா் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உருவாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்களும் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயினை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணாயிரமூா்த்தி, மதுரை. 

Tags:    

மேலும் செய்திகள்