'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-05-31 20:35 GMT

புகை மூட்டத்தால் அவதி

மதுரை குலமங்கலம் சாலையில் பனங்காடி கண்மாய் ஓர சாலையில் குப்பைகள் மலைபோல குவிக்கப்படுகிறது. மேலும் பேச்சிகுளம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு தான் கொட்டப்படுகிறது. குவிக்கப்பட்ட குப்பைகளுக்கு அவ்வப்போது சிலர் தீ வைக்கின்றனர். இதனால் சாலை புகைமூட்டமாகி வாகனஓட்டிகளை திசைமாற செய்து விபத்துக்குள்ளாகி வருகிறது. கண்மாய் மாசடைவதாலும் விபத்து ஏற்படுவதாலும் இங்கு குப்பைகள் கொட்டப்படுவதை அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை வேண்டும்.

கார்த்திக், பனங்காடி.

செய்தி எதிரொலி

விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமம் 2-வது வார்டு தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகளானது தேங்கி அடைப்பு ஏற்பட்டது. அதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதாரம் சீர்கேடு அடைந்து தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவியது. இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. அதன் எதிெராலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு தேங்கிய குப்பைகளை அகற்றினர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், தம்பிபட்டி.

சேதமடைந்த சாலை

மதுரை மாவட்டம் செல்லூர் பாலம்-குலமங்கலம் சாலை, மீனாட்சிபுரம் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தினமும் எண்ணற்ற வாகனங்கள் இந்த சாலைகளில் இயக்கப்படும். இந்நிலையில் சேதமடைந்த சாலையில் வாகனங்களை இயக்க வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேலும் தடுமாறும் வாகனங்களால் இந்த சாலையில் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் மோசமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணாயிரமூர்த்தி, குலமங்கலம்.

நடவடிக்கை தேவை

ராமநாதபுரம் மாவட்ட நகர்ப்பகுதியில் எண்ணற்ற நாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்களை பின் தொடர்ந்து தொல்லை அளிக்கிறது. மேலும் வாகனங்களின் குறுக்கே வந்தும் விழுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லியோ, ராமநாதபுரம்.

பராமரிப்பற்ற நீர்தொட்டி

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூரில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர்தேக்க தொட்டிகளானது பராமரிக்கப்படாமல் பாழடைந்துள்ளது. பல தொட்டிகளின் மேற்சுவரில் செடிகள் முதலானவை வளர்ந்து நீர்தொட்டியை பலவீனம் அடைய செய்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரிக்க வேண்டும்.

பொதுமக்கள், எஸ்.புதூர்.

நிரம்பி வழியும் கழிவுநீர்கால்வாய்

மதுரை மாவட்டம் 87-வது வார்டு அனுப்பானடி குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீரானது நிரம்பி சாலையில் தேங்கி நிற்கிறது. தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி அப்பகுதியின் சுகாதாரத்தை கெடுக்கிறது. இதனால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கால்வாய் அடைப்பை சரிசெய்து தேங்கிய கழிவுநீரை அகற்ற வேண்டும்.

காளிமுத்து, அனுப்பானடி.

தெருவிளக்கு எரியாததால் பொதுமக்கள் அவதி

திருப்பரங்குன்றம் ரவுண்டாவில் ஹைமாஸ் விளக்கு கடந்த சில நாட்களாகவே எரியவில்லை. இதனால் திருப்பரங்குன்றம் பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த வழியாக இரவில் பொதுமக்கள் நடமாட மிகவும் பயப்படுகின்றனர். இருட்டை பயன்படுத்தி திருடர்கள் தொல்லையும் அதிகரித்து விட்டது. இதே போல பசுமலை மூலக்கரை அருகே ரவுண்டாவில். ஹைமாஸ் லைட் எரியவில்லை.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்குகளை எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திருப்பரங்குன்றம்.

குடிநீர் தட்டுப்பாடு

ராமநாதபுரம் மாவட்டம் காவனூர் அருகே குளத்தூர் கிராமத்தில் வாரத்திற்கு 3 முறை குடிநீரானது பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வாரத்திற்கு 1 முறையாக குடிநீா் வினியோகம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் பலகிலோ மீட்டர் தூரம் சென்று நீர் எடுத்து வருகிறார்கள். சிலர் காசு கொடுத்தும் குடிநீரை பெறும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய வேண்டும்.

கலைச்செல்வி, காவனூர்.

பொதுமக்கள் சிரமம்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா மகாராஜபுரம் ஊராட்சி அம்மா பூங்கா எதிரில் வத்திராயிருப்பு-விருதுநகர் மெயின்ரோடு உள்ளது. இந்த சாலையானது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சேதமடைந்தது. சேதமடைந்த சாலையில் மழை பெய்தால் நீரானது தேங்கி வாகன ஓட்டிகளை தடுமாற செய்கிறது. இதனால் சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். சிறு, சிறு, விபத்துகள் நிகழ்ந்து வரும் இந்தச்சாலையில் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

சுகி, மகாராஜபுரம்.

போக்குவரத்து நெரிசல்

சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் மதுரை-சிவகங்கை நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்தச்சாலையில் தினமும் ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் இயங்கும் நிலையில் சாலைவிரிவாக்க பணி நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் வாகன நெரிசலால் பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் இப்பகுதியில் நடைபெறும் நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆன்டோஜோன், பூவந்தி.

Tags:    

மேலும் செய்திகள்