தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-03-15 18:30 GMT

தார்சாலை அமைக்க வேண்டும்

கரூர் மாவட்டம், மூர்த்திபாளையம் பகுதியில் சிமெண்ட் ஆலைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள தார் எல்லாம் பெயர்ந்து மண்சாலையாக காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதியினர் சாலையை கடப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். மேலும் வழிநெடுகிலும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. எனவே இந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க கேட்டுக்கொள்கிறோம்.

ரவிசங்கர், மூர்த்திபாளையம்.

பழுதடைந்த மின்கம்பம்

கரூர் மாவட்டம், வாங்கல் மெயின் ரோட்டில், இருபுறமும் மின்கம்பங்கள் உள்ளன. அதில் மின்கம்பிகளை தாங்கிச்செல்லும் சில மின்கம்பங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதில் உள்ள சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த மோசமான மின்கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்கவேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.

வேலுசாமி, வாங்கல்.

கழிவுநீர் வடிகால் அமைக்கப்படுமா?

தாந்தோணிமலை அடுத்த நிலாநகர் கிழக்கு பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக பலர் குடியிருந்து வருகின்றனர். இங்கு கழிவுநீர் செல்ல வழியில்லாததால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் பல்வேறு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுகிறது. இதனை சரிசெய்து கழிவுநீர் வடிகால் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தாந்தோணிமலை.

வேகத்தடை வேண்டும்

கிருஷ்ணராயபுரத்தில் கரூர்-திருச்சி சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த சாலையானது எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்தே காணப்படும். இந்த பகுதியில் வேகத்தடைகள் எதுவும் இல்லாததால் இந்த வழியாக வரும் வாகனங்கள் வேகமாக வருகின்றன. இதனால் மாணவர்களும், பொதுமக்களும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் உதவியாக இருக்கும்.

குழந்தைவேல், திருக்காம்புலியூர்.

தெருநாய்கள் தொல்லை

கரூர் நகரப்பகுதிகளில் உள்ள சாலைகளில் ஏராளமான தெருநாய்கள் இரவு நேரங்களில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துகின்றன. இதனால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் குழந்தைகளையும் கடிக்க பாய்கின்றன. இதனால் பெற்றோர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கரூர்.

Tags:    

மேலும் செய்திகள்