தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-12-18 19:12 GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி, ஆவாரங்காட்டுபுத்தூர் பகுதியில் சாலைகள் அமைக்க ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் சாலைகள் போடப்படாமல் இருப்பதை சுட்டி காட்டி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இந்த செய்தி எதிரொலியாக சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த சாலையை ஜல்லி கற்களை போட்டு சீரமைத்து தற்சமயம் வேகத்தடையும் அமைத்துள்ளனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், ஆவாரங்காட்டுபுத்தூர்.

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம், நொய்யல் செல்லாண்டி அம்மன் கோவில் பகுதியில் இருந்து தேர் தேரோட்டம் செல்லும் தார் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதன் காரணமாக தார் சாலை நெடுகிலும் குண்டும், குழியுமாக பழுதடைந்துள்ளது. இந்த சாலை வழியாக பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கோவிலுக்கும், உள்ளூர் பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது வீடுகளுக்கும் நான்கு சக்கர வாகனங்களிலும், இருசக்கர வாகனங்களிலும் சென்று வருகின்றனர். இந்த நிலையில் தார் சாலை நெடுகிலும் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வரலட்சுமி, நொய்யல்

சுகாதார சீர்கேடு

காதப்பாறை ஊராட்சி, வெண்ணெய்மலை ஒன்றிய அலுவலகத்தையொட்டி பின் பகுதியில் 200-க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஒன்றிய அலுவலகத்தின் அருகிலேயே கொட்டிவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வெண்ணெய்மலை

தூர்வாரப்படாத கால்வாய்

கரூர் மாவட்டம், புங்கோடை காளிபாளையம் பகுதியில் உபரிநீர் கால்வாய் வெட்டப்பட்டு இந்த கால்வாய் வழியாக விவசாயத்தோட்டங்களில் இருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் மழைநீர் செல்கிறது. இந்த உபரிநீர் கால்வாய் தூர்வாரப்பட்டு சில ஆண்டுகள் ஆனதன் காரணமாக ஆள் உயரத்திற்கு ஏராளமான சம்பு மற்றும் செடி-கொடிகள் முளைத்துள்ளன. இதன் காரணமாக இந்த வழியாக உபரிநீர் மற்றும் மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

லோகேஷ்வரன், புங்கோடை

வேகத்தடை அமைக்கப்படுமா?

கரூர் மாவட்டம், புகழூர் தாலுகா, கோம்புப்பாளையம் மற்றும் வேட்டமங்கலம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட முனிநாதபுரம் என்கிற வெள்ளக்கல்மேடு பகுதியில் நொய்யல்-வேலாயுதம்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் உடல் உறுப்புகள் சேதம் அடைந்தும், ஆபத்தான நிலையில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி செல்கின்றனர். எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையின் குறுக்கே வேகத்தடை அமைத்துத்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சங்கீதா, கோம்புப்பாளையம்

Tags:    

மேலும் செய்திகள்