தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
உடைந்த நிலையில் உள்ள மின்கம்பம்
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி ஏரிக்கரைமேட்டு தெருவில் மின் கம்பம் ஒன்று அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது அதன் அடிப்பகுதி சிதிலமடைந்து உடைந்த நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ஏரிக்கரை.
சிதிலமடைந்த வாய்க்கால் பாலம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி 20-வது வார்டு வளவெட்டித் தெரு ஆவேரி ஏரியின் வரத்து வாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள வாய்க்கால் பாலம் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பாலத்தின் வழியாக நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுதாகர் ஜெயங்கொண்டம்.
சாலையில் தேங்கி கிடக்கும் மண்கள்
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி புறக்காவல் நிலையம் முதல் முத்துவாஞ்சேரி சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் வரை சாலையின் இரு புறமும் அதிகளவில் மண்கள் தேங்கியுள்ளது. இதனால் இவ்வழியே கனரக வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதால், தேங்கியுள்ள மண்கள் காற்றில் பறப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில சமயங்களில் மண்கள் காற்றில் பறந்து வந்து கண்களை பதம் பார்ப்பதால் விபத்துகளும் நிகழ்கிறது. இதோடு இல்லாமல் சில இடங்களில் சுண்ணாம்புக்கல் மண்கள் அதிக அளவில் மேடாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள் வி.கைகாட்டி.
குண்டும், குழியுமான சாலை
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள கழுமங்கலம் கிராமத்தில் இருந்து நாகல்குழி செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது அந்த சாலை குண்டும், குழியாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் வெளியூர் சென்று விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு வரும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், உடையார்பாளையம்
குப்பை மேடாக மாறிவரும் சுடுகாடு
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் இரும்புலிக்குறிச்சியில் சிறுகடம்பூர் சாலையில் சுடுகாடு ஒன்று உள்ளது. இந்த சுடுகாட்டில் கோழி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், ஓட்டல்களில் வீணான உணவு அதிகளவில் கொட்டி வருகின்றனர். இதனால் சுடுகாடு குப்பை கிடங்காக மாறி வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், இரும்புலிக்குறிச்சி.