தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பஸ் வசதி வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டிக்கு புதுக்கோட்டையில் இருந்து பெருமநாடு, குடுமியான் மலை, காட்டுப்பட்டி, குளவாய்ப்பட்டி, புதூர் வழியாக பஸ் சேவை இல்லாததால் இப்பகுதி மக்கள் வெளியூர் செல்ல பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ரகுமத்துல்லா, முக்கண்ணாமலைப்பட்டி.
சங்கு சத்தத்தை அதிகரிக்க கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் விட்டல்தாஜ் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊதுவதைப் பார்த்தே சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் நேரத்தை கணக்கிட்டு தங்கள் வேலைகளுக்கு சென்றனர். அதன் பிறகு சங்கு ஊதுவது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் சீரமைக்கப்பட்டு சங்கு ஊதத் தொடங்கியுள்ளது. ஆனால் சத்தம் குறைவாக உள்ளதால் கீரமங்கலத்தில் உள்ள பகுதிகளுக்கே கேட்பதில்லை. அதனால் பழையபடியே அதிக சத்தத்துடன் சங்கு ஊத சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கீரமங்கலம்.
பராமரிக்கப்படாத சேவை மைய கட்டிடம்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், கோத்திரப்பட்டி ஊராட்சி மலைக்குடி பட்டியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சேவை மைய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கட்டிடம் பராமரிப்பு இன்றி உள்ளதால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சண்முகசுந்தரம், அன்னவாசல்.
கர்ப்பிணிகள் அவதி
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, தென்னம்பாடி ஊராட்சி கூத்தக்குடி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள கர்ப்பிணிகள் மாதம் ஒருமுறையும், நிறைமாத கர்ப்பிணிகள் வாரம் ஒரு முறையும் பரிசோதனைக்காக நீர்பழனி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. கூத்தக்குடி கிராமத்தில் இருந்து நீர்பழனிக்கு சுமார் 25 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டி உள்ளது. இதனால் கர்ப்பிணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அருகாமையில் உள்ள மலைக்குடிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பாண்டியன், கூத்தக்குடி.
வாகன ஓட்டிகள் அவதி
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கீரமங்கலம் மெய்நின்றநாதர் கோவில் பின்புறம் பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையுடன் இணையும் வகையில் குறுக்குவழிப்பாதை உள்ளது. இந்த வழியாக வரும் வாகனங்கள் சாலைவிதிகளைப் பின்பற்றாமல் அதிவேகமாக சாலையைக் கடப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் பிரதான சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குறுக்குவழிப்பாதையை மூடி விபத்துக்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ஆலங்குடி.