குப்பைகள் அகற்றப்பட்டது
குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட கீழ்பம்மம் பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் ெகாட்டப்பட்டு வந்தது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றினர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
சாலையை சீரமைக்க வேண்டும்
ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் இருந்து கன்கார்டியா பள்ளி வரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்டது. பின்னர் பள்ளங்களை சரியாக மூடாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். மேலும் இந்த வழியாக தான் அடிக்கடி ஆம்புலன்ஸ் சென்று வருகிறது. இதனால் நோயாளிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.மகேஷ், ராஜாக்கமங்கலம்.
சுகாதார சீர்கேடு
அடைக்காகுழி பஞ்சாயத்துக்குட்பட்ட நெய்யாறு இடதுகரை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் மங்குலியில் இருந்து செறுகோடு வரை அந்த பகுதயில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிபு, தேரிவிளை.
குரங்குகள் தொல்லை
அருமநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட செக்கடி கிராமத்தில் சில நாட்களாக குரங்குகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. அவ்வாறு சுற்றித்திரியும் குரங்குகள் அப்பகுதியில் உள்ள தென்னை, பலா உள்ளிட்ட விளை பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் வீடுகளில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரின்ஸ், அருமநல்லூர்.
விபத்து அபாயம்
தோட்டியோட்டில் இருந்து திங்கள்நகர் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் பேயன்குழி ஊரில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி நெடுஞ்சாலை அருகில் உள்ளதால் மாணவர்கள் காலையும், மாலையும் சாலையை கடந்து தான் பள்ளிக்கு செல்ல முடியும். ஆனால் பள்ளி அருகில் சாலையின் இருபுறமும் எந்த வித எச்சரிக்கை பலகையும் இல்லாததால் வேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் சாலையில் இருபுறமும் எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவிகுமார், மொட்டவிளை.
ஜல்லிகள் பெயா்ந்த சாலை
மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட கைப்பூரிவிளையில் இருந்து முள்ளிறங்கி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். மேலும் வாகன ஓட்டிகள் விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ், அம்சிகாகுழி.