தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2022-09-05 15:01 GMT

சரிசெய்யப்பட்டது

குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட ஆசாத் நகர் பகுதியில் பல நாட்களாக பகல் நேரங்களில் தெருவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. இதனால், மின்சாரம் வீணாகுவதுடன், அந்த விளக்கு விரைவில் பழுதடைய வாய்ப்பு இருந்தது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்விளக்கு பகலில் எரிவதை சரிசெய்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாாிகளுக்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

வடிகால் வசதி வேண்டும்

பைங்குளம் பேரூராட்சிக்குட்பட்ட முக்காடு பகுதியில் உள்ள அம்சி ஏலாவில் விவசாயம் நடைபெற்று வந்தது. தற்போது இந்த ஏலாவில் இருந்து உபரிநீர் வடிந்து வெளியேறும் வடிகாலை ஆக்கிரமித்து அடைத்து வைத்துள்ளனர். இதனால் அம்சி ஏலாவில் புதர்கள் வளர்ந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வயல்வெளிகளில் இருந்து உபரிநீர் வெளியேற தகுந்த வடிகால் வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-காளிதாசன், முக்காடு.

வேகத்தடை வேண்டும்

அஞ்சுகிராமம் பேரூராட்சிக்குட்பட்ட ஜேம்ஸ்டவுன் ஜங்ஷன் பகுதியில் உள்ள சாலையில் வாகனங்கள் எப்போதும் சென்று வருகின்றன. இந்த பகுதியில் பள்ளி, கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து வரும் மாணவர்கள் சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் இந்த பகுதியில் வேகத்தடை இல்லாததால், வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்துகளை தடுக்க அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செ.காந்திராஜ், அஞ்சுகிராமம்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் வட்டம், மருங்கூர் பேரூராட்சி, குமாரபுரம் தோப்பூர், ராஜாவூர், ராமனாதிச்சன்புதூர் உள்பட பல ஊர்களில் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீரை ஓடையில் விடக்கூடாது எனக்கூறி அந்த குழாய்களை அடைத்து வருகின்றனர். இதனால் இடம் இல்லாத பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடை திட்டத்தை போல், அனைத்து பேரூராட்சிகளிலும் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லியோன், குமாரபுரம் தோப்பூர்.

ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி

அருமநல்லூர் பஞ்சாயத்துக்குட்பட்ட அருமநல்லூரில் தம்புரான் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார். அருமநல்லூர்.

சாலையை சீரமைக்க வேண்டும்

கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை கொட்டாரத்தில் இருந்து கோட்டார் வரை சேதமடைந்து, பள்ளங்களாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ச.ராம்தாஸ், சந்தையடி.

Tags:    

மேலும் செய்திகள்