தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-20 18:28 GMT

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுந்தராம்மாள் நகர் 3- வது தெருவில் தார்சாலை போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் தற்போது சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக் கொள்கிறோம்.

மித்திரன் ராதா, வேலாயுதம்பாளையம்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

கரூர் மாவட்டம், வெண்ணெய்மலை மெயின் சாலை பகுதியில் மலைப்போல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகள் கால்நடைகள் கிளறி வருவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வாகனங்களில் செல்வோர் மூக்கை பிடித்து கொண்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், வெண்ணெய்மலை

அறிவிப்பு பலகை கோரிக்கை

குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு முன்புறம் சாலையோரம் மின்சார மின்மாற்றி (டிரேன்ஸ்பார்மர்) ஒன்று உள்ளது. போலீஸ் நிலையத்திற்கு வருபவர்களும், அருகில் உள்ள ஓட்டல்களுக்கு சாப்பிடுவதற்காக செல்வோரும் தாங்கள் பயணிக்கும் கார், வேன் போன்ற வாகனங்களை மின்மாற்றியின் அருகில் சாலையோரம் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் போலீஸ் நிலையம் அமைந்துள்ள தெரு பகுதியில் உள்ள சாலையில் இருந்து பிரதான சாலைக்கு செல்லும்போது பிரதான சாலையில் வரும் வாகனங்கள் சரிவர தெரியாததால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய நிலை உள்ளது. அதுபோல பிரதான சாலையில் இருந்து இந்த தெரு பகுதிக்கு வாகனத்தை இயக்கும் போதும் அந்த வழியாக வரும் வாகனங்கள் தெரிவதில்லை. எனவே வாகன ஓட்டுகளின் நலனை கருத்தில் கொண்டு விபத்துகளை தடுக்கும் பொருட்டு குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு முன்புறமுள்ள மின்சார மின்மாற்றி அருகே எந்த ஒரு நபரும் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது. அவ்வாறு வாகனங்கள் அங்கு நிற்காத வகையில் அந்த இடத்தில் அறிவிப்பு பலகை வைத்து வாகனங்கள் நிறுத்தா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் குளித்தலை.

தேங்கி நிற்கும் மழைநீர்

கரூர் மாவட்டம் பாலத்துறை அருகே கொடுமுடி பகுதியில் இருந்து பரமத்தி வேலூர் செல்லும் சாலையின் ஓரத்தில் நெடுகிலும் பள்ளமாக உள்ளது. இதன் காரணமாக மழை நீர் குழிகளில் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் இந்த சாலை வழியாக ஏராளமான தனியார் மற்றும் அரசு பேருந்துகள், லாரிகள் ,கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தார் சாலை வழியாக இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்லும் போது அதனை ஒட்டி பெரிய வாகனங்கள் செல்லும்போது குழியில் மழை நீர் தேங்கி உள்ள இடத்தில் பெரிய வாகனங்களின் டயர் பட்டு இரு சக்கர வாகனம் ஓட்டுனர் மீது மழை நீர் பட்டு நனைந்து அவதிப்பட்டு செல்கின்றனர். எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார் சாலை ஓரத்தில் உள்ள குழிகளுக்கு மண் போட்டு நிரப்பி தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பாலத்துறை.

அரசு டவுன் பஸ்கள் இயக்க கோரிக்கை

கரூர் மாவட்டம் புன்னம் சத்திரத்தில் இருந்து வேலாயுதம்பாளையம் வரை நிறைய ஊர்கள் உள்ளன. இந்த ஊர்களில் இருந்து பல்வேறு பணிகளுக்கு செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் புன்னம் சத்திரம் பகுதிக்கும், வேலாயுதம்பாளையம் பகுதிக்கும் இருசக்கர வாகனத்திலும் ,கூலித் தொழிலாளிகள் நடந்து சென்று பஸ்கள் ஏறி சென்று வருகின்றனர். இந்த வழியாக குறிப்பிட்ட ஒரு முறை மட்டும் அரசு டவுன் பஸ் சென்று வருகிறது. இதனால் கரூர்- ஈரோடு நெடுஞ்சாலை பகுதிக்கும், பரமத்தி வேலூர், கொடுமுடி, ஈரோடு, கோவை செல்லும் பகுதிக்கும் பஸ்கள் செல்ல அதியமான் கோட்டை, மசக்கவுண்டன்புதூர், மூலமங்கலம் , புது குறுக்குபாளையம்,புகழூர் ரெயில் நிலையம் பகுதிகளை சேர்ந்தவர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்றும், நடந்து சென்றும் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். எனவே புன்னம் சத்திரத்தில் இருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில் அரசு டவுன் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், புன்னம்சத்திரம்.

Tags:    

மேலும் செய்திகள்