தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-15 19:35 GMT

ஆபத்தான மின்கம்பம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள மணவாளன் கரையில் ஒரு மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் இருந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் கம்பிகள் வெளியே தெரிகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், மணவாளன் கரை.

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், அண்டக்குளத்தில் இருந்து பெருங்களூர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

முகமது சித்திக், அண்டக்குளம்.

நடைமேடையை சரிசெய்ய கோரிக்கை

புதுக்கோட்டை கறம்பக்குடி பஸ்நிலைய சாலையில் பேரூராட்சிக்கு சொந்தமான காந்தி பூங்கா உள்ளது. இதில் காலை நேரங்களில் பலர் நடை பயிற்சி செய்து வருகின்றனர். ஆனால் இந்த பூங்காவில் உள்ள நடைமேடை உடைந்து மேடு பள்ளமாக உள்ளது. இதனால் முறையாக நடைபயிற்சி செல்ல முடிவதில்லை. மேலும் சிறுவர் சிறுமிகள் விளையாடும் உபகரணங்கள் சேதமடைந்து உள்ளன. போதுமானதாகவும் இல்லை. எனவே கறம்பக்குடியில் உள்ள ஒரே பொழுதுபோக்கு இடமான காந்தி பூங்காவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கறம்பக்குடி.

பதாகைகளால் விபத்து ஏற்படும் அபாயம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பஸ் நிலையம் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மொய் விருந்து, திருமணம், காதணி விழா பதாகைகள், அரசியல் பதாகைகள் வைத்ததால் பிரச்சினைகள் ஏற்பட்டதால் அதன் பிறகு பதாகைகள் வைக்க தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மீண்டும் பஸ் நிலையம் பகுதியில் வரிசையாக ஆபத்தான நிலையில் பதாகைகள் வைக்க தொடங்கியுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுவதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆபத்துகளை ஏற்படுத்தும் பதாகைகள் வைப்பதை பேரூராட்சி நிர்வாகம் தடைவிதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், கீரமங்கலம்.

வீணாகும் குடிநீர்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் புதுப்பட்டி ஊராட்சியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி எதிரில் உள்ள குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு கடந்த இரண்டு நாட்களாக தண்ணீர் வெளியேறி கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், புதுப்பட்டி.

Tags:    

மேலும் செய்திகள்