தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-25 18:11 GMT

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பங்கள்

திருச்சி மாவட்டம், ஶ்ரீரங்கம் தாலுகா, கே.கள்ளுக்குடி தெற்கு மணிகண்டம், பகவதி அம்மன் கோவில் தெருவில் உள்ள வீடுகளுக்கு மின்இணைப்பு வழங்கும் வகையில் இப்பகுதியில் 4 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுக்கள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மணிகண்டம், திருச்சி.

தெருநாய்களால் தொல்லை

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டு அந்த வழியாக செல்பவர்களை கடிக்க துரத்துகிறது. மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை துரத்துவதினால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

லெட்சுமிகாந்த், தொட்டியம், திருச்சி.

சாலையை சீரமைக்க வேண்டும்

திருச்சி மாநகராட்சி 39-வது வார்டு, பாத்திமாபுரம் 3-வது, 4-வது தெருவில் இருந்து பாப்பாக்குறிச்சி சாலைக்கு செல்லும் மெயின் ரோடு சாலை இணையும் பகுதி பள்ளமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அப்துல் ரஹ்மான், பாத்திமாபுரம், திருச்சி.

பராமரிக்கப்படாத கழிப்பறை

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், சீலைப்பிள்ளையார் புத்தூர் கிராமத்தில் உள்ள வன்னியர் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பெண்களின் நலன் கருதி இப்பகுதியில் பெண்கள் பொதுகழிப்பறை கட்டப்பட்டது. இந்த நிலையில் இந்த பெண்கள் கழிப்பறை பராமரிக்கப்படாமல் பயன்பாடு இன்றி காணப்படுகிறது. இதனால் இப்பகுதி பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சீலைப்பிள்ளையார் புத்தூர், திருச்சி.

நின்று செல்லாத பஸ்களால் மக்கள் அவதி

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், கல்லுப்பட்டியில் திருச்சி முதல் மதுரை வரை செல்லக் கூடிய அனைத்து பஸ்களும் நின்று செல்லும் என்று தமிழக போக்குவரத்து கழக அதிகாரிகள் பலமுறை கூறியும், எந்த பஸ்களும் நின்று செல்லுவதில்லை. இதுகுறித்து கண்டக்டரிடம் கேட்டால் டவுன் பஸ் வரும் அதில் செல்லுங்கள் என்று அலட்சியமாக பதில் சொல்லுகின்றனர். கல்லுப்பட்டியானது அனைத்து கிராமமக்களுக்கும் பொது பஸ் நிறுத்தமாக செயல்படுகிறது. இங்கிருந்து கல்லூரி மாணவர்களும், வேலைக்கு செல்லுபவர்களும் அதிக மாக பயணம் செய்கின்றனர். நின்று செல்லக் கூடிய பஸ்களும் நிற்காமல் செல்வதால் பயணிகளும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கல்லுப்பட்டி, திருச்சி. 

Tags:    

மேலும் செய்திகள்