தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புதர்மண்டி கிடக்கும் சுடுகாடு
கரூர் மாவட்டம் நடையனூர் சுற்றுப்பகுதியில் இறப்பவர்களின் உடலை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் ஏதுவாக அங்கு காம்பவுண்ட் சுவருடன் கூடிய சுடுகாடு உள்ளது. அப்பகுதியை சேர்ந்த இறந்தவர்களை புதைத்தும், எரித்தும் வந்தனர். இந்நிலையில் பராமரிப்பு இல்லாததால் சுடுகாட்டுக்குள் ஏராளமான செடி, கொடிகள் மற்றும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் அங்கு இறந்தவர்களின் உடல்களை எரிக்கவோ, புதைக்கவோ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சித்துறை நிர்வாகத்தினர் விரைந்து நடவடிக்கை எடுத்து சுடுகாட்டுக்குள் முளைத்துள்ள செடி, கொடிகளையும், சீமக்கருவேல மரங்களையும் அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சதீஷ், நடையனூர், கரூர்.
அலட்சியத்தால் விபத்து ஏற்படும் நிலை
கரூர் மாவட்டம், நடையனூரில் இருந்து பேச்சிப்பாறை செல்லும் தார் சாலை ஓரத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின் கம்பம் நடப்பட்டது. அந்த கம்பத்தின் வழியாக செல்லும் கம்பியில் 24 மணி நேரமும் மின்சாரம் வினியோகம் செல்கிறது. இந்நிலையில் மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது கம்பத்தில் இருந்த சிமெண்டு பூச்சுக்கள் உதிர்ந்து கம்பிகள் தெரிகிறது. இந்நிலையில் பழைய கம்பத்திற்கு அருகே புதிய கம்பம் நடப்பட்டது. கம்பம் நடப்பட்டு சுமார் ஒரு ஆண்டுக்கு மேலாகியும் பழைய கம்பத்திலிருந்து புதிய கம்பத்திற்கு மின்கம்பிகள் மாற்றப்படவில்லை. இதனால் பழைய மின் கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஸ்ரீராம், பேச்சிப்பாறை, கரூர்.