'தினத்தந்தி' புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தார்சாலை அமைக்கப்படுமா?
நெல்லை மாவட்டம் அம்பை தாலுகா அடையகருங்குளம் ஊராட்சி பகுதியில் உல்லாச நகரையும், மந்தை காலனியையும் இணைக்கும் சாலையில் வெறும் ஜல்லிக்கற்கள் மட்டும் கொட்டப்பட்டுள்ளது. மேலே மண் எதுவும் போடப்படாமல் கடந்த 3 மாதங்களாக அப்படியே கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக சைக்கிளில் பள்ளி மாணவர்கள் செல்ல முடிவதில்லை. மேலும், அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே, விரைந்து தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மரியாஸ் துரை, உல்லாசநகர்.
அரசு பஸ் வசதி தேவை
பாளையங்கோட்டை தாலுகா முத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குத்துக்கல் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், முத்தூர், சிவந்திப்பட்டி மற்றும் கொடிகுளம் ஆகிய இடங்களில் இருந்து தினமும் மாணவ-மாணவிகள் அரசு பஸ்சில் வந்து சென்றனர். இதற்கிடையே, கடந்த சில மாதங்களாக காலை நேரத்தில் அரசு பஸ் சரிவர இயக்கப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கு வந்து செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே, அந்த அரசு பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், ராஜகோபாலபுரம்.
குண்டும் குழியுமான சாலை
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள சுண்டங்குறிச்சி கிராமத்தில் சாலை பல வருடங்களாக பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக கிடக்கிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் நடப்பது மட்டுமல்லாமல், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
வல்லரசு, தேவர்குளம்.
மினிபஸ் வருமா?
நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் இருந்து கே.டி.சி.நகர் புதிய ஹவுசிங் போர்டு பகுதி வரை மினி பஸ் வந்து கொண்டிருந்தது. ஆனால் சமீப காலமாக புதிய ஹவுசிங் போர்டு பகுதிக்குள் வராமல் மங்கம்மா சாலை பகுதிக்கு சென்றுவிடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, முன்பு போன்று மினிபஸ் வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
அமுதா, கே.டி.சி.நகர்.
செயல்படாத பொது சுகாதார வளாகம்
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் முதலியார்பட்டி ஊராட்சி அம்பாநகர் பகுதியில் ஆண்களுக்கான பொது சுகாதார வளாகம் உள்ளது. இங்குள்ள மின்மோட்டார் பழுது காரணமாக கடந்த ஒரு ஆண்டாக சுகாதார வளாகம் செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் பொது வெளியை அசுத்தப்படுத்துகிறார்கள். எனவே, பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்து, சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருக்குமரன், கடையம்.
சாலை வசதி வேண்டும்
இலஞ்சியில் இருந்து தென்காசிக்கு செல்லும் ரோட்டில் மின்வாரிய அலுவலகம் அருகே ஆற்றுப்பாலம் உள்ளது. அந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டு வெகு நாட்களாகியும் சாலை வசதி முறையாக அமைக்கப்படவில்லை. சரள் மண் மட்டுமே பரப்பப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே, முறையாக சாலை அமைத்துக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வேண்டுகிறேன்.
துரைகுமார், இலஞ்சி.
சர்வீஸ் ரோட்டில் பஸ்கள் நிற்குமா?
தூத்துக்குடி- கோரம்பள்ளம் நான்கு வழிச்சாலையின் இருபுறமும் சர்வீஸ் ரோடு பஸ்நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காமல், மெயின் ரோட்டிலேயே பயணிகள் இறக்கி விடப்படுகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, சர்வீஸ் ரோட்டில் உள்ள பஸ்நிறுத்தத்துக்கு சென்று பயணிகளை ஏற்றி இறக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?
பாலசுப்பிரமணியன், கோரம்பள்ளம்.
திறந்து கிடக்கும் மின்பெட்டி
கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு ஆவின் பால் பண்ணைக்கு தென்புறம் அமைந்துள்ள மின்கம்பத்தில் மின்பெட்டி திறந்த நிலையில் உள்ளது. குழந்தைகள் தொடும் உயரத்தில் மிகவும் தாழ்வாக இருப்பதாலும், மழைக்காலத்தில் தண்ணீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாலும் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, மின்பெட்டியை மூடி சற்று உயரத்தில் அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
பாலமுருகன், கோவில்பட்டி.
பாலம் அமைக்க வேண்டும்
கயத்தாறு தாலுகா கலப்பைப்பட்டி ஊருக்கு வடக்கே காட்டு பகுதியில் தில்லைவனத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு செல்லும் பாதையில் ஓடை அமைந்துள்ளது. மழைக்காலத்தில் அந்த ஓடையில் மழைநீர் செல்வதால் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல முடிவதில்லை. எனவே, ஓடைப்பகுதியில் பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
மனோகரன், கலப்பைப்பட்டி.