தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-16 17:58 GMT

நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?

திருச்சி மாவட்டம், த.புத்தூர், தண்டலை, நல்லியம்பட்டி, திருத்தலையூர் மார்க்கத்தில் காலை 5 மணிக்கு அரசு நகர பஸ்சும், காலை 6.45 மணிக்கு முசிறி மார்க்கமாகவும், குளித்தலை மார்க்கமாகவும் 2 தனியார் பஸ்களும், முற்பகல் 10.45 மணிக்கு திருத்தலையூர் மூவானூர் மார்க்கமாக திருச்சி வரை அரசு பஸ்சும், இரவு 8 மணிக்கு முசிறியிலிருந்து திருத்தலையூர் வரை தனியார் பஸ்சும், 8.30 மணிக்கு அரசு நகர பஸ்சும், இரவு 10.45 மணிக்கும் இயக்கப்பட்ட அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டுவிட்டதால் மாணவ, மாணவிகளும், வேலைக்கு சென்று வீடுதிரும்புபவர்களும், பெண்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தண்டலை, திருச்சி.

ஆபத்தான மின்கம்பம்

திருச்சி மாவட்டம், சிறுகனூர் ஊராட்சி, அம்பேத்கர் காலனி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் மிகவும் ஆபத்தாக காணப்படுகிறது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த மின்கம்பத்தின் அருகே புதிய மின்கம்பம் அமைத்தனர். மின்கம்பம் அமைக்கப்பட்டு சுமார் 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மின்இணைப்பை மாற்றாமல் உள்ளனர். எனவே விபத்து ஏற்படும் முன் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அம்பேத்கர் காலனி, திருச்சி.

மாடுகள்-நாய்கள் தொல்லை

திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இந்தநிலையில் மார்க்கெட் உள் பகுதியில் ஏராளமான மாடுகளும், நாய்களும் சுற்றித்திரிகின்றன. இந்த மாடுகள் கடைகளில் உள்ள காய்கறிகளை திண்று விடுகிறது. மேலும் நாய்கள் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் துரத்தி சென்று கடித்தும் வருகிறது. மார்க்கெட்டிற்கு வெளியே சிலர் தடைக்கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருவதால் அந்த பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஜெய்சங்கர், காந்திமார்க்கெட், திருச்சி.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், வேங்கூர் பெரியார் காலனி பகுதியில் குடிநீர் குழாயை சுற்றி சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. மேலும் இந்த கால்வாயில் குப்பைகளுடன், மதுபாட்டில்களும் சேர்ந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கணேசன், திருவெறும்பூர், திருச்சி. 

Tags:    

மேலும் செய்திகள்