தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி சுந்தர்நகர் இந்திரா தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட மண்ணை கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் போட்டு அடைத்து விட்டனர். இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருவில் கழிவுநீர் தேங்கி நின்றது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வாய்க்காலில் கொட்டப்பட்ட மண்ணை அப்புறப்படுத்தினர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
சிராஜ், சுந்தர்நகர், திருச்சி.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், மால்வாயில் இருந்து ஒரத்தூர், சாத்தபாடி, சில்லகுடி வரை சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுவதுடன் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
முருகவேல், மால்வாய், திருச்சி.
குரங்குகளால் தொல்லை
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், மூவானூர் மற்றும் மூவானூர் கீழூரில் ஏராளமான குரங்குகள் காணப்படுகின்றன. இவை இப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து திண்பண்டங்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச்செல்வதுடன், குழந்தைகளை கடிக்க வருகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள பழவகை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பிரவீண்குமார், மூவானூர், திருச்சி.