தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஏரியில் முளைத்துள்ள செடிகள் அகற்றப்படுமா?
அரியலூர் மாவட்டம், உத்திரக்குடி கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் அப்பகுதி மக்கள் துணி துவைப்பது, குளிப்பது மற்றும் தங்களின் வீட்டுக்கு தேவையான தண்ணீரை எடுத்துச் செல்வது உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தி வந்தனர். மேலும் இந்த ஏரியில் கால்நடைகள் நீர் அருந்தி வருகின்றன. இந்த நிலையில் இந்த ஏரியில் தாமரைச்செடிகள், சம்புகள் உள்ளிட்டவை அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதனால் இந்த ஏரியில் குளிப்பவர்களுக்கு ஒவ்வாமை மற்றும் எரிச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இந்த ஏரியில் படர்ந்துள்ள தாமரைச்செடிகள் மற்றும் சம்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், உத்திரக்குடி, அரியலூர்.
இடவசதி இல்லாத விளையாட்டு மைதானம்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெய்க்குப்பை கிராமத்தில் கிழக்கு தெருவிற்கு போதிய இடவசதி இல்லாமல் விளையாட்டு மைதானம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைக்கப்பட்டுள்ளது. சரியான இடவசதி இல்லாததால் இப்பகுதி இளைஞர்களால் விளையாட முடியவில்லை. எனவே கபடி, கிரிக்கெட், ஓட்டப்பந்தயம் என பல்வேறு போட்டிகளுக்கு தயாராவதற்கு பெரிய மைதானம் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், நெய்க்குப்பை, பெரம்பலூர்.