கன்னியாகுமரியில் பணம் மோசடி விவகாரம்: வாடிக்கையாளர்களை கவரஇளம்பெண்களுக்கு தினம் ரூ.2,500 சம்பளம் கைதான கும்பல் குறித்து பரபரப்பு தகவல்

கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜில் நடைபெற்ற பணம் மோசடியில் வாடிக்கையாளர்களை கவர இளம்பெண்களுக்கு தினம் ரூ.2,500 சம்பளம் வழங்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியானது.

Update: 2022-11-04 21:24 GMT

நாகர்கோவில்:

கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜில் நடைபெற்ற பணம் மோசடியில் வாடிக்கையாளர்களை கவர இளம்பெண்களுக்கு தினம் ரூ.2,500 சம்பளம் வழங்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியானது.

17 பேர் கைது

கன்னியாகுமரி வடக்கு குண்டலில் உள்ள ஒரு லாட்ஜில் போலீசார் நடத்திய சோதனையில் ஒரு ரூபாய் கொடுத்தால் 5 ரூபாய் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது. அந்த கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், மதுரை அருகே பேரையூரை சேர்ந்த சுந்தர பாண்டியன் (வயது 36) என்பவர் தான் மோசடி கும்பலின் தலைவராக செயல்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சுந்தர பாண்டியன் உள்பட மொத்தம் 17 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.11 லட்சம், 3 கார்கள் மற்றும் மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் சுந்தர பாண்டியன் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

இரிடியம் மோசடி

மோசடி கும்பலின் தலைவர் சுந்தர பாண்டியன் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். விவசாயம் செய்து வந்த அவரை இரிடியம் தருவதாக கூறி சிலர் ஏமாற்றியுள்ளனர். இதில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார். அதன்பிறகு அவர் மலேசியா சென்று அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்துள்ளார். அப்போது அங்குள்ள முதலாளி சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார். இதனால் பட்டினி கிடந்து மிகவும் கஷ்டப்பட்டு ஊருக்கு வந்து சேர்ந்தார்.

பின்னர் பால் கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கி மாடு வளர்ப்பில் ஈடுபட்டார். மீண்டும் இவரை இரிடியம் கும்பல் ஏமாற்றியது. எனவே ஏமாற்றினால் தான் பிழைக்க முடியும் என்ற மன நிலைக்கு சுந்தர பாண்டியன் வந்துள்ளார். தனது நண்பர் ஒருவரின் மூலம் தன்னிடம் இரிடியம் இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் பரப்பினார். இதை பார்த்து பலரும் அவரை தொடர்பு கொண்டனர். அவ்வாறு தொடர்பு கொண்ட அனைவரையும் அவர் ஏமாற்றியுள்ளார்.

இளம்பெண்கள்

இவ்வாறாக படிப்படியாக பலரை ஏமாற்றி அதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். அந்த பணத்தின் மூலம் ஏராளமான நிலங்கள் வாங்கி உள்ளார். அழகான பெண்கள் இருந்தால்தான் வாடிக்கையாளர்களை கவர முடியும் என்பதற்காக தினமும் ரூ.2,500 சம்பளத்தில் மும்பையில் இருந்து இளம்பெண்களை வரவழைத்துள்ளார். வாடிக்கையாளர்களை நம்ப வைப்பதற்காக ரிசர்வ் வங்கி உதவியுடன் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்கிறோம் என கூறி, அதற்கான போலி சான்றிதழ்களையும் காட்டி உள்ளனர். யூடியூப் பார்த்து இந்த போலி சான்றிதழை அச்சடித்துள்ளனர்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்