தினத்தந்தி செய்தி எதிரொலி; நந்தியாற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக நகராட்சிக்கு நோட்டீஸ் - பொதுப்பணித்துறை நடவடிக்கை
நந்தியாற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக திருத்தணி நகராட்சிக்கு பொதுப்பணித்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
நந்தியாறு சோளிங்கர் அருகே உருவாகி அய்யனேரி, அகூர், தரணிவராகபுரம் வழியாக திருத்தணி நகருக்குள் நுழைகிறது. பின் அங்கிருந்து இல்லத்தூர்-ராமாபுரம் இடையே சென்று கொசஸ்தலை ஆற்றில் கலந்து பூண்டி நீர் தேக்கத்துக்கு சென்றடைகிறது. இந்த நிலையில் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கால்வாய் வழியாக திருத்தணி பைபாஸ் சாலையில் உள்ள உயர் மட்ட மேம்பாலம் அருகே நந்தியாற்றில் நேரடியாக கலக்கிறது. ஆற்றில் கழிவுகள் கலப்பதால், குடிநீர் மாசுபாடு ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி நமது தினத்தந்தி நாளிதழில் கடந்த 17-ந்தேதி செய்தி வெளியானது. இதன் எதிரோலியாக திருத்தணி நீர்வளத்துறையின் உதவி செயற்பொறியாளர் சிவசண்முகம், உதவி பொறியாளர் சுந்தரம் ஆகியோர் நந்தியாற்றில் நகராட்சி கழிவுநீர் கலக்கும் இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் இதுதொடர்பாக திருத்தணி நகராட்சிக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.