சைபர் கிரைம்; 24 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால் பண இழப்பை தடுக்கலாம் -டி.ஜி.பி. பேட்டி
சைபர் கிரைம் தொடர்பாக 24 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால் பண இழப்பை தடுக்கலாம் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதற்கு தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமை தாங்கி, திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட நகைகளை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டம்-ஒழுங்கு சிறப்பு
தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிதம்பரம் குழந்தை திருமணத்தில் இருவிரல் பரிசோதனை சம்பந்தமாக ஏற்கனவே சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் விரிவாக விளக்கம் கொடுத்துவிட்டனர்.
1 லட்சத்து 32 ஆயிரம் காவலர்களை கொண்ட தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆயிரம் பேரை நியமித்தோம். இதுவரை உள்ள அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.
16 சோதனை சாவடி
தமிழக எல்லையான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி எல்லைகளில் உள்ள 26 முக்கிய சோதனை சாவடியில் காவல்துறையை சேர்ந்தவர்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் சோதனை நடத்தி வருகின்றனர். எதிர்காலத்தில் மற்ற துறைகளுடன் இணைந்து 16 இடங்களில் சோதனை சாவடி அமைத்து சோதனை நடத்தப்படும்.
சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சைபர் கிரைம்
பணமோசடி சைபர் குற்றங்கள் தொடர்பாக 24 மணி நேரத்திற்குள் 190 என்ற கட்டுப்பாட்டு எண்ணில் புகார் அளித்தால், உங்கள் பணத்தை பரிமாற்றம் செய்ய விடாமல் தடுக்க முடியும். பண இழப்பையும் தடுக்கலாம். பொதுமக்கள் செல்போனில் காவல் உதவி என்ற செயலியை பதிவிறக்கம் செய்து ஆபத்து காலத்தில் பயன்படுத்தலாம். இந்த செயலியில் போலீசார் செய்ய வேண்டிய 66 உதவிகள் சம்பந்தமாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
இவ்வாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உள்பட பலர் உடனிருந்தனர்.