அனைத்து பள்ளிகளிலும் சைபர் குழு தொடங்கப்படும்

சைபர் குற்றங்களை தடுக்க சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சைபர் குழு தொடங்கப்படும் என்று சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்

Update: 2023-06-24 18:45 GMT

சைபர் குற்றங்களை தடுக்க சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சைபர் குழு தொடங்கப்படும் என்று சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

சைபர் குழு

இது தொடர்பாக சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் கூறியதாவது:- தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை கூடுதல் இயக்குனர் சஞ்சய்குமார் உத்தரவுபடியும், காவல் கண்காணிப்பாளர் சைபர்கிரைம் பிரிவு தேவராணி, சிவகங்கை மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் வழிகாட்டுதலின்படி சைபர் குற்றங்களை தடுக்க சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சைபர் குழு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது முதல் கட்டமாக 3 பள்ளிகளில் சைபர் கிளப் தொடங்கப்பட்டுள்ளது.

இக்குழு மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் குறைந்தபட்சம் 10 மாணவர்களை உறுப்பினர்களாக சேர்த்து, அந்த குழுவின் தலைவர்களாக செயல்படும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து மாவட்ட அளவில் சைபர் கிரைம் காவல் நிலைய அலுவலர்களுடன் வாட்ஸ்-அப் குழு உருவாக்கப்பட்டு அதில் பகிரப்படும் சைபர் கிரைம் விழிப்புணர்வு சார்ந்த செய்திகள் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மூலமாக சென்றடைந்து சைபர் கிரைம் குற்றங்கள் பெருமளவு தடுக்கப்படும்.

முதல்கட்டமாக 3 பள்ளிகளில்

பொதுவாக சைபர் குற்றங்கள் குறித்து உடனடியாக உதவிமைய கட்டணமில்லாத தொலைபேசி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமும் புகார் தரலாம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பாக பள்ளிகளில் சைபர் கிளப் தொடங்கும் நிகழ்ச்சி சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் ஆய்வாளர் தேவி, தொழில்நுட்ப ஆய்வாளர் சதீஷ்குமார், சைபர் கிளப் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியி்ல முதல்கட்டமாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 3 பள்ளிகளில் சைபர் கிளப் ஆரம்பிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்