பகுதி நேர வேலையில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக்கூறி ஆசிரியர் உள்பட 3 பேரிடம் ரூ.26 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

Update: 2023-06-21 19:00 GMT

பகுதி நேர வேலையில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக்கூறி ஆசிரியர் உள்பட 3 பேரிடம் ரூ.26 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி ஆசிரியர்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா ஒட்டப்பட்டி அருகே உள்ள மூக்கம்பட்டியை சேர்ந்த 35 வயது நபர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 23.5.2023 அன்று இவரது செல்போன் வாட்ஸ்-அப்பில் ஒரு குறுந்தகவல் வந்தது.

அதில் பகுதி நேர வேலையில் பணியாற்றினால் அதிக கமிஷன் பெறலாம் என்று கூறப்பட்டது. மேலும் இதற்காக குறிப்பிட்ட சில வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்ப அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி ஆசிரியர் மேற்கண்ட வங்கி கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளில் ரூ.5 லட்சத்து 89 ஆயிரத்து 978 அனுப்பினார். தொகையை பெற்ற பிறகு எதிர்முனையில் இருந்து யாரும் தொடர்பு கொள்ளவில்லை.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆசிரியர் இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

தனியார் நிறுவன ஊழியர்

ஓசூர் கே.சி.சி. நகரை சேர்ந்த 22 வயது நபர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 29.4.2023 அன்று இவரது செல்போன் வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் வந்தது. அதில் பகுதி நேரமாக வேலை செய்தால் அதிக லாபம் பெறலாம் என்றும், அதற்காக குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்ப வேண்டும் என கூறப்பட்டது.

அதை நம்பி தனியார் நிறுவன ஊழியர் ரூ.5 லட்சத்து 95 ஆயிரம் தொகையை வங்கி கணக்குகளுக்கு அனுப்பினார். அதன் பிறகு எதிர்முனையில் யாரும் தொடர்பு கொள்ளவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்

கிருஷ்ணகிரி பெத்தமேலுப்பள்ளியை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர். கடந்த 13.6.2023 அன்று இவரது வாட்ஸ்அப்பில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேரமாக பணியாற்றினால் அதிக லாபம் பெறலாம் என கூறப்பட்டிருந்தது. இதற்காக குறிப்பிட்ட தொகையை அனுப்ப கூறப்பட்டிருந்தது.

அதை நம்பி அவர் ரூ.14 லட்சத்து 24 ஆயிரத்து 20 அனுப்பினார். தொகையை பெற்ற பிறகு அவரிடம் பேசிய நபர் பேசுவதை தவிர்த்தார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தனியார் நிறுவன ஊழியர் இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

இந்த 3 புகார்கள் குறித்தும் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்