2 ஆண்டுகளில்விழுப்புரம் தொகுதியில் எந்த ஒரு பணிகளும் செய்யவில்லைசி.வி.சண்முகம் எம்.பி. குற்றச்சாட்டு

கடந்த 2 ஆண்டுகளில் விழுப்புரம் தொகுதியில் எந்த ஒரு பணிகளும் செய்யவில்லை என்று சி.வி.சண்முகம் எம்.பி. குற்றம்சாட்டினார்.

Update: 2023-01-20 18:45 GMT


விழுப்புரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விழுப்புரம் தெற்கு நகர செயலாளர் பசுபதி தலைமை தாங்கினார். வடக்கு நகர செயலாளர் ராமதாஸ் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்பாபு, பேட்டை முருகன், ராமதாஸ், கண்ணன், ராஜா, வளவனுர் நகர செயலாளர் முருகவேல், முன்னாள் நகரமன்ற துணைத்தலைவர் பார்த்திபன், முன்னாள் அரசு வக்கீல் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி., மாநில செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம், தலைமை கழக பேச்சாளர் ராஜசேகர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் சி.வி.சண்முகம் எம்.பி. பேசியதாவது:-

நீட்தேர்வு ரத்துசெய்யவில்லை

தி.மு.க.வினர் திராவிட மாடல் என்று சொல்லிக்கொள்கின்றனர். எம்.ஜி.ஆர். இல்லை என்றால் திராவிட கழகம் இல்லை. எம்.ஜி.ஆர்.தான் திராவிடத்திற்கு அடித்தளம் போட்டவர்.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிந்துள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு தேவையான புதிய திட்டங்களை அறிவித்துள்ளாரா?.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றனர், ஆனால் ரத்து செய்யவில்லை.

நாட்டில் தற்போது சட்டம்- ஒழுங்கு சரியில்லை. தினந்தோறும் பலாத்காரம் மற்றும் கூட்டு பலாத்காரம் அதிகரித்துள்ளது. சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. அதுபோல் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மாணவர், இளைஞர் சமுதாயம் சீரழிந்து கொண்டுள்ளது.

எந்த பணியும் செய்யவில்லை

விழுப்புரம் தொகுதி மற்றும் நகரத்தில் 2 ஆண்டுகளில் என்ன செய்துள்ளீர்கள். ஜெயலலிதா பெயரில் கொண்டு வந்த பல்கலைக்கழகத்தை மூடுவிழா நடத்திவிட்டீர்கள். இங்கு வர இருந்த டைட்டல் பார்க்கை புதுச்சேரிக்கு அருகில் கொண்டு சென்றுவிட்டீர்கள். ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகளாகியும், தென்பெண்ணை ஆற்றில் உடைந்து சேதமடைந்த 2 தடுப்பணைகளை இன்னும் சீரமைக்கவில்லை. தளவானூர் அணைக்கட்டு உடைந்த சம்பவத்தில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரை எங்கள் ஆட்சியில் சஸ்பெண்ட் செய்தோம். ஆனால் நீங்கள் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் அவருக்கு வேலையும் அளித்து கூடுதல் பதவியும் வழங்கியுள்ளீர்கள். இந்த அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகளில் எந்தவொரு பணிகளும் செய்யவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தாமல் ரத்து செய்துவிட்டது. இப்படிப்பட்ட அரசுக்கு தமிழக மக்கள் விரைவில் முடிவு கட்ட வேண்டும். அ.தி.மு.க.விற்கு என்றென்றும் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்துகொண்டவர்கள்

கூட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் முத்தையன், துணை செயலாளர் திருப்பதி பாலாஜி, இணை செயலாளர் செங்குட்டுவன், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், நகரமன்ற கவுன்சிலர்கள் கோல்டுசேகர், கோதண்டராமன், நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் குமரன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் தங்கசேகர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஜானகிராமன்,

தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜெகதீஸ்வரி சத்யராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்