தூத்துக்குடியில் பிரியாணி கடைக்காரருக்கு வெட்டு
தூத்துக்குடியில் தொழில் போட்டியில் பிரியாணி கடைக்காரரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைதுசெய்தனர்.
தூத்துக்குடி கே.டி.சி.நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் ராஜதுரை (வயது 29). ஸ்டேட் வங்கி காலனி மெயின் ரோட்டில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவருக்கும், தூத்துக்குடி தனசேகரன்நகரை சேர்ந்த பரமசிவம் (39) என்பவருக்கும் இடையே தொழில் ரீதியாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் கடையில் இருந்த ராஜதுரையை, பரமசிவம் அரிவாளால் வெட்டினாராம். இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் ராஜதுரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து பரமசிவத்தை கைது செய்தனர்.