சுங்கச்சாவடி ஊழியர் தீக்குளித்து தற்கொலை

சுங்கச்சாவடி ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-01 20:10 GMT

சுங்கச்சாவடி ஊழியர்

பெரம்பலூர் மாவட்டம், எஸ்.ஆடுதுறை கிராமத்தை சேர்ந்தவர் கோபால்(வயது 42). இவர் மங்களமேடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட திருமாந்துறையில் உள்ள சுங்கச்சாவடியில் பராமரிப்பு பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக கடந்த 9 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கோபால் சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. ேமலும் கோபாலுக்கு கடன் பிரச்சினையும் இருந்ததால், குடும்பத்தை சமாளிக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

தீக்குளித்து தற்கொலை

இதையடுத்து நேற்று காலை பெட்ரோல் கேனுடன் கோபால் சு.ஆடுதுறையில் உள்ள வெள்ளாற்றங்கரைக்கு சென்றார். அங்குள்ள தகரக் கொட்டகைக்குள் சென்ற அவர், உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகி சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த வழியாக ஆற்றுக்கு சென்றவர்கள், கோபால் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது குறித்து மங்களமேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மங்களமேடு போலீசார், கோபாலின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே தகவல் அறிந்து பதறியடித்து கொண்டு வந்த உறவினர்கள், கோபாலின் உடலை கண்டு கதறி அழுதது, காண்பவர்களையும் கண்கலங்க செய்தது.

கடன் பிரச்சினையால்...

கடன் பிரச்சினையாலும், குடும்ப பிரச்சினை காரணமாகவும் கோபால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணியாற்றிய 28 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்தும், அவர்களை மீண்டும் பணியமர்த்த கோரியும் சுங்கச்சாவடி ஊழியர்கள் கடந்த ஒரு மாதமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கோபால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்ததாக பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுங்கச்சாவடி ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்