கன்னிப்பூ சாகுபடி தொடங்கியது
குமரி மாவட்டத்தில் 6 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் கன்னிப்பூ சாகுபடி செய்யும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக நிலத்தை உழுது நாற்றங்கால் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 6 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் கன்னிப்பூ சாகுபடி செய்யும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக நிலத்தை உழுது நாற்றங்கால் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கன்னிப்பூ சாகுபடி
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ மற்றும் கும்பப்பூ ஆகிய இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கும்பப்பூ அறுவடையின் போது நன்றாக வெயில் அடித்ததால் வைக்கோலுக்கு நல்ல விலை கிடைத்தது.
கும்பப்பூ அறுவடை முடிந்ததைத் தொடர்ந்து கன்னிப்பூ சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி சுமார் 6 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் நடைபெறுவது வழக்கம். தற்போது பேச்சிப்பாறை அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால் ஜூன் 1-ந் தேதி அணை திறக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்நோக்கி உள்ளனர். இந்த தண்ணீரை மையப்படுத்தியே மாவட்டத்தில் சாகுபடி பணியை மேற்கொள்வார்கள்.
குளத்து நீர் பாசனம்
ஆனால் பறக்கை மற்றும் பால்குளம் ஆகிய பகுதிகளில் குளத்துநீர் பாசனத்தை நம்பியே நெல் பயிரிடப்படுகிறது. குளத்து தண்ணீர் இருப்பை பொறுத்து பிற இடங்களில் சாகுபடி தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே இங்கு சாகுபடி தொடங்கி விடும்.
இந்த நிலையில் கடந்த பங்குனி உத்திரத்தின் போது பறக்கை மற்றும் பால்குளம் பகுதிகளில் உள்ள விவசாய நிலத்தில் சாகுபடி மேற்கொள்ளும் வகையில் பறக்கை பெரியகுளத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து இந்த பகுதி விவசாயிகள் நாற்றங்கால் அமைக்கும் பணியை மேற்கொண்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பறக்கை பகுதியில் நாற்றங்கால் அமைக்கப்பட்டது. குளத்தில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளதால் நாற்றங்கால் செழித்து வளர்ந்து வருகிறது. தொடர்ந்து நடவு செய்வதற்காக நிலம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் வயலில் நாற்று நடப்பட உள்ளது.
இதுபோல் தேரூர், மணவாளக்குறிச்சி, சுசீந்திரம், மயிலாடி உள்ளிட்ட பல பகுதிகளில் நாற்றங்கால் அமைப்பதற்காக நிலம் தயார் செய்யப்பட்டு வருகிறது.