கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் குடிநீர் டிராக்டர் சாலையோர பள்ளத்தில் சாய்ந்தது போக்குவரத்து பாதிப்பு
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் குடிநீர் டிராக்டர் சாலையோர பள்ளத்தில் சாய்ந்தது.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போடிச்செட்டி தெரு, கம்மியம்பேட்டை 4 முனை சந்திப்பில் பள்ளம் தோண்டி குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பள்ளத்தில் நேற்று அந்த வழியாக சென்ற தனியார் குடிநீர் டிராக் டர் சிக்கி சாய்ந்தது. இதையடுத்து அந்த குடிநீர் டிராக்டரை நீண்ட நேரம் போராடி டிரைவர் வெளியே எடுக்க முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை. பின்னர் பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு, வெளியே எடுக்கும் பணி நடந்தது. இருப்பினும் அதை வெளியே கொண்டு வர முடியவில்லை. இதற்கிடையில் அந்த சாலை பிரதான சாலை என்பதால் 4 பக்கத்திலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. பின்னர் அந்த டிராக்டரில் இருந்த தண்ணீரை கீழே கொட்டி, பொக்லைன் எந்திரம் மூலம் வெளியே எடுக்கப்பட்டது. இருப்பினும் அந்த பகுதியில் சுமார் 30 நிமிடத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.