கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-15 18:45 GMT

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று பெண் ஒருவர் வந்தார். பின்னர் அவர் திடீரென தான் கையில் கொண்டு வந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் பார்த்து ஓடிச்சென்று மண்எண்ணெய் பாட்டிலை அந்த பெண்ணிடம் இருந்து பிடுங்கினர். தொடர்ந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர்.

தொடர்ந்து அந்த பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் திட்டக்குடி அருகே கீழ்ச்செருவாய் பகுதியை சேர்ந்த கவியரசன் மனைவி தமிழ்செல்வி (வயது 28) என்பபதும், காதல் கலப்பு திருமணம் செய்ததும் தெரியவந்தது. மேலும் கவியரசன் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதும், அவர்களுக்கு 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.

இந்நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த 2 பேர், தமிழ்செல்வியை வெளியில் செல்லும் போது ஆபாசமாக திட்டி தாக்கியதாகவும், இது பற்றிய புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார், அவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவர்களை போலீசார் கைது செய்யாததால், தொடர்ந்து அவர்கள் தொந்தரவு செய்து வருவதாகவும், இதனால் தான் வேறுவழியின்றி தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருளை வைத்திருந்ததாக அவர் மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்