கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. இன்று முழு அடைப்பு போராட்டம் -அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

என்.எல்.சி. நிறுவனத்தின் நில அபகரிப்பை கண்டித்து, பா.ம.க. சார்பில் கடலூர் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்து உள்ளார்.

Update: 2023-03-10 22:57 GMT

சென்னை,

கடலூர் மாவட்டம், வளையமாதேவி கீழ்பாதி கிராமத்தில் விவசாயிகளின் நிலத்தை கட்டுப்பாட்டில் எடுத்து சமன்படுத்துவதற்காக என்.எல்.சி. நிறுவனம் மேற்கொண்ட அத்துமீறல்களும், அதற்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறைகளும் தேவையற்றவை. என்.எல்.சி.யும், மாவட்ட நிர்வாகமும் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று அச்சுறுத்துவதற்காகவே என்.எல்.சி., மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்றைய (நேற்று முன்தினம்) நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. அவற்றை கடலூர் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

வளையமாதேவி கீழ்பாதி கிராமத்தில் சமன்படுத்தப்பட்ட பெரும்பான்மையான நிலங்களுக்கு உரிய இழப்பீடு இன்னும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. அந்த நிலங்கள் 2006-ம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்டவை என்று என்.எல்.சி. தரப்பில் கூறப்படுகிறது. அது உண்மை தான் என்றாலும் கூட, அவற்றுக்கு அப்போது அறிவிக்கப்பட்ட விலையான ரூ.6 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. அவற்றுக்கு கூடுதலாக அறிவிக்கப்பட்ட ரூ.3 லட்சம் இன்னும் வழங்கப்படவில்லை. அத்தொகையை வழங்காமலேயே ஏழை, நடுத்தர விவசாயிகளின் நிலங்களைப் பறிப்பது அதிகார அத்துமீறலின் உச்சமாகும்.

முழுஅடைப்பு போராட்டம்

விவசாயிகளையும், பொதுமக்களையும் கிள்ளுக்கீரையாக கருதும் என்.எல்.சி. நிறுவனத்துக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பாடம் புகட்டுவதற்காகத்தான் நாளை (இன்று) கடலூர் மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தை பா.ம.க. அறிவித்திருக்கிறது. இது என்.எல்.சி. நிலம் எடுப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மட்டும் நடத்தப்படும் போராட்டம் அல்ல. அடுத்து வரும் ஆண்டுகளில் பொதுமக்களின் வீடுகள், நிலங்கள் பறிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் நடத்தப்படும் போராட்டம் தான் இதுவாகும்.

நாளைய (இன்று) முழு அடைப்பு போராட்டத்திற்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாய அமைப்புகள், வணிகர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழ் தேசிய பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமனும், என்.எல்.சி. நிறுவனத்தின் நில ஆக்கிரமிப்பு விவகாரத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்