உடைந்து விழும் இரும்பு தடுப்புகள்
கூடலூரில் நடைபாதை ஓரம் அமைக்கப்பட்ட இரும்பு தடுப்புகள் உடைந்து விழுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கூடலூர்
கூடலூரில் நடைபாதை ஓரம் அமைக்கப்பட்ட இரும்பு தடுப்புகள் உடைந்து விழுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நடைபாதை
கேரளா-கர்நாடகா மற்றும் தமிழகம் என 3 மாநிலங்கள் இணையும் பகுதியில் நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. இதுதவிர கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் 2½ லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு அலுவலகப் பணி மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக கூடலூருக்கு ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர்.
இதேபோல் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் காலை மற்றும் மாலை நேரத்தில் பள்ளிக்கூடம் சென்று விட்டு வீடு திரும்புகின்றனர். இதனால் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நகரப் பகுதியாக கூடலூர் விளங்குகிறது. வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ளதால் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க நகராட்சி நிர்வாகம் சாலையோரம் உள்ள நடைபாதை ஓரங்களில் பல லட்சம் செலவில் இரும்பு தடுப்புகளை சில வாரங்களுக்கு முன்பு புதிதாக அமைத்தது.
உடைந்து விழும் தடுப்புகள்
இதனால் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லாமல் நடைபாதையில் சென்று வந்தனர். தொடர்ந்து வணிக நிறுவனங்களுக்கு பொதுமக்கள் செல்லும் வகையில் பல இடங்களில் இடைவெளி விட்டு இரும்பு தடுப்புகள் பொருத்தப்பட்டன. ஆனால், இரும்பு தடுப்புகள் நடைபாதையோரம் பலமாக பொருத்தப்பட வில்லை. இதனால் சில இடங்களில் உடைந்து விழுந்தது.
தொடர்ந்து இரவில் இரும்பு தடுப்புகளை சமூக விரோதிகள் உடைத்து தள்ளுகின்றனர். அவர்களை நகராட்சி நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்து உள்ளது. மேலும் அரசின் பணமும் வீணாகும் நிலை காணப்படுகிறது. இரும்பு தடுப்புகள் பெரும்பாலான இடங்களில் அகற்றப்பட்டு உள்ளதால் மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.