ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவதற்காக மிருகங்களை துன்புறுத்த அனுமதிக்க முடியாது - ஐகோர்ட்டு உத்தரவு

ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவதற்காக மிருகங்களை துன்புறுத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-08-20 13:53 GMT

சென்னை,

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், "திருவண்ணைநல்லூர் பகுதியில் அரசியல் கட்சி பிரமுகர் உள்ளிட்டோர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்து வருகின்றனர். அதை தடுக்க வேண்டும் என்றும் அந்த நிலத்துக்கு பட்டா வழங்கக்கூடாது என்றும் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்த அனுமதிக்க கோரி விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு, திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டரிடம் கொடுத்த மனுவை கடந்த 11-ந்தேதி நிராகரிக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, போராட்டத்துக்கு அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிடவேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஸ்குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,

ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவதற்காக மிருகங்களை துன்புறுத்துவதை அனுமதிக்க முடியாது. எருமை மாடு அல்லது வேறு எந்த ஒரு மிருகத்தையும் காலை முதல் மாலை வரை நிற்க வைத்து போராட்டம் நடத்துவது என்பது மிருக வதை தடைச் சட்டத்தை மீறும் செயலாகும். எனவே, எருமை மாட்டிடம் மனு கொடுத்து போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது.

ஆனால், மனுதாரர் தரப்பு வக்கீல். மிருகம் இல்லாமல் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். எனவே, மிருகம் இல்லாமல் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்த விரும்புவதாக மனுதாரர் தரப்பில் கூறப்படுவதால், போராட்டம் நடத்த வழக்கமான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க போலீசார் பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்