கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
கொடைக்கானலில் கோடை விழா முடிந்த பிறகும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. வட்டக்கானல் அருவியில் குளித்து உற்சாகம் அடைந்தனர்.
குளு, குளு சீசன்
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். மேலும் கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது.
சமீபத்தில் கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்து, பார்வையிட்டனர். இந்தநிலையில் கோடைவிழா முடிந்த பிறகும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
அதன்படி, நேற்று வார விடுமுறை என்பதால் அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். அவர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்களிலும், மோட்டார் சைக்கிளிலும் ஒரே நேரத்தில் வந்ததால் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்தினர். பின்னர் சுற்றுலா இடங்களை நோக்கி சுற்றுலா பயணிகள் சென்றனர்.
அருவியில் குளித்து உற்சாகம்
கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள மோயர் பாயிண்ட், பைன்மரக்காடு, பில்லர்ராக், குணாகுகை, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் மற்றும் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டதுடன், அங்கு நிலவிய இயற்கை காட்சிகளை பார்த்து மகிழ்ந்தனர். மேலும்தங்களது செல்போன், கேமராக்களில் புகைப்படம், 'செல்பி' எடுத்தனர்.
மேலும் பாம்பார் அருவி, வெள்ளி நீர்வீழ்ச்சி, தேவதை அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை பார்த்து ரசித்தனர். குறிப்பாக வட்டக்கானல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து உற்சாகம் அடைந்தனர். இதுதவிர நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்தும் பொழுதுபோக்கினர்.
இதற்கிடையே கொடைக்கானலில் மதியம் 3 மணிக்கு மேல் சுமார் அரை மணி சாரல் மழை பெய்தது. அப்போது நிலவிய சீதோஷ்ண சூழலை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர்.