கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
வாரவிமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள் படையெடுப்பு
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. மேலும் கொடைக்கானலில் வருகிற 26-ந்தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்க உள்ளது.
இதையொட்டி கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதிலும், வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்தநிலையில் நேற்று வார விடுமுறை என்பதால் அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர். இதற்கிடையே ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் வந்ததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையில் அணிவகுத்து நின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.
படகுசவாரி
பின்னர் கோக்கர்ஸ்வாக், பைன்மரக்காடு, மோயர் பாயிண்ட், பில்லர்ராக் உள்ளிட்ட சுற்றுலா இடங்களையும், பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்காவையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். மேலும் தங்களது செல்போன், கேமராக்களில் புகைப்படம், செல்பி எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.
இதேபோல் நட்சத்திர ஏரியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்றுகளை பார்த்து ரசித்தபடி சுற்றுலா பயணிகள் படகுசவாரி செய்தனர். மேலும் ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்தும் உற்சாகம் அடைந்தனர். மேலும் வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, பியர்சோழா அருவி, தேவதை அருவி உள்ளிட்ட அருவிகளையும் பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
கொடைக்கானலில் நேற்று காலை முதல் மதியம் வரை கடும் வெப்பம் நிலவியது. அதன்பிறகு மாலையில் இதமான சூழல் ஏற்பட்டது.