பொங்கல் தொடர் விடுமுறையையொட்டிசுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள்

பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி குமரி மாவட்ட சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் குடும்பத்தினருடன் கடலில் நீராடியும், அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர்.

Update: 2023-01-16 19:00 GMT

கன்னியாகுமரி:

பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி குமரி மாவட்ட சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் குடும்பத்தினருடன் கடலில் நீராடியும், அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர்.

கன்னியாகுமரி

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாட்டுப்பொங்கலும், இன்று (செவ்வாய்க்கிழமை) காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் நேற்று அதிகாலையிலேயே வாகனங்களில் ஏராளமானவர்கள் வந்தனர். அவர்கள் முக்கடல் சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடி, சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்தனர். பின்னர் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட்டனர். அங்கிருந்து படகுத்துறைக்கு வந்த சுற்றுலா பயணிகள் படகு மூலம் விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்று பார்த்து மகிழ்ந்தனர். படகு வழக்கமாக காலை 8 மணி முதல் இயக்கப்படும். ஆனால் பொங்கல் பண்டிகையையொட்டி 2 மணி நேரம் முன்னதாக அதாவது 6 மணியில் இருந்து இயக்கப்பட்ட போதிலும் படகுத்துறையில் கூட்டம் அதிகமாக இருந்ததால், சுற்றுலா பயணிகள் வெகுநேரம் காத்து இருந்து படகில் பயணம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, சன்செட் பாயிண்ட், வட்டக்கோட்டை, சுற்றுச்சூழல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.

கன்னியாகுமரி கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

திற்பரப்பு அருவி

குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவிக்கு அதிகாலையில் இ்ருந்தே சுற்றுலா பயணிகள் வர தொடங்கினார்கள். நேரம் செல்ல, செல்ல சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்தது. ஆனாலும் திற்பரப்பு அருவியில் குறைந்த அளவு தண்ணீரே கொட்டியது. அதில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். அதே சமயம் அங்குள்ள நீச்சல் குளத்தில் சிறுவர்கள் நீச்சலடித்தனர். அதைத்தொடர்ந்து அங்குள்ள சிறுவர் பூங்காவின் சறுக்கு விளையாட்டுகளிலும் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.

மேலும் திற்பரப்பு தடுப்பணையிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்தனர்.

பேச்சிப்பாறை அணை

அதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் சிலர் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளையும் பார்த்து மகிழ்ந்தனர். மாத்தூர் தொட்டிபாலத்துக்கும் அவர்கள் சென்று இயற்கை அழகை ரசித்து மகிழ்ந்தனர்.

மேலும் காளிகேசம் அருவி மற்றும் அங்குள்ள சுற்றுச்சூழல் பூங்கா, சங்குமுகம், முட்டம், சொத்தவிளை லெமூர், குளச்சல், தேங்காப்பட்டணம் ஆகிய கடற்கரைகளிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். அவர்கள் அங்கு இயற்கை அழகை ரசித்து மகிழ்ந்தனர். குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.

Tags:    

மேலும் செய்திகள்