பஸ், ரெயில் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

தொடர்விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து ஏராளமானோர் திரும்பியதால் திருச்சி பஸ் நிலையம், ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதினர்.

Update: 2023-10-24 20:05 GMT

தொடர்விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து ஏராளமானோர் திரும்பியதால் திருச்சி பஸ் நிலையம், ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதினர்.

விடுமுறை முடிந்து திரும்பினர்

தமிழகத்தின் மையப்பகுதியாக இருப்பதால் திருச்சி மத்திய பஸ்நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். அரசு விடுமுறை நாட்கள், விழாக்காலங்கள் உள்ளிட்ட நாட்களில் மத்திய பஸ்நிலையத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு பயணிகள் கூட்டம் அலைமோதும்.

இந்தநிலையில் ஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி கடந்த 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால், ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் பகுதிக்கும், சென்னைக்கும் செல்ல நேற்று மதியம் முதலே ஏராளமானோர் திருச்சி மத்திய பஸ்நிலையத்துக்கு வரத்தொடங்கினர்.

பயணிகள் கூட்டம்

இதனால் பஸ்நிலையம் மற்றும் ரெயில் நிலையம் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மேலும் நேற்று மாலை சென்னை, பெங்களூருக்கு செல்ல வேண்டிய பல ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டதால், அதில் முன்பதிவு செய்தவர்கள், திருச்சிக்கு வந்து அரசு பஸ்களில் சென்னை மற்றும் பெங்களூருக்கு சென்றனர்.

இதனால் பஸ்களில் இடம்பிடிக்க பயணிகள் முட்டி மோதிக்கொண்டனர். இதுபோல் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திலும் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக நள்ளிரவு தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சென்ற ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் அனைத்து நிரம்பி வழிந்தன. பலர் ரெயிலில் இடம் கிடைக்காமல் பஸ்களை பிடித்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்