பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் கரிநாளாக கருதி அசைவ பிரியர்கள் இறைச்சி சாப்பிடுவது வழக்கம் ஆகும். அந்த வகையில் நேற்று நெல்லை மாவட்டத்தில் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
நேற்று அதிகாலையிலேயே ஆடு, கோழி, மாடு இறைச்சி கடைகளை திறந்தனர். அங்கு காலை முதல் அசைவ பிரியர்கள் வந்து இறைச்சிகளை வாங்கி சென்றனர்.
நெல்லை மாநகர பகுதியில் ஆடு இறைச்சி 1 கிலோ ரூ.900 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்பட்டது. புறநகர் பகுதியில் 1 கிலோ ஆடு இறைச்சி ரூ.700-க்கு விற்பனை ஆனது. இதுபோல் கோழி இறைச்சி ரூ.300 முதல் ரூ.400 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. அந்த கடைகளில் மக்கள் வரிசையில் நின்று இறைச்சி வாங்கி சென்றனர். பண்டிகை கால விலை ஏற்றத்தை தவிர்க்க சில குடும்பத்தினர் ஆடுகளை வாங்கி, பங்கு கறி போட்டனர்.