வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதல்

ஆயுதபூஜையையொட்டி வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பொரி, பூக்கள், பழங்கள், வாழை மரக்கன்று வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2022-10-03 15:43 GMT

ஆயுதபூஜையையொட்டி வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பொரி, பூக்கள், பழங்கள், வாழை மரக்கன்று வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

ஆயுதபூஜை

ஆயுத பூஜை செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் ஆட்டோ டிரைவர்கள், வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கடைகளில் வேலை செய்யும் நபர்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களை தூய்மையாக்கி பொரி, பழங்கள், சர்க்கரை, இனிப்புகள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்வார்கள். மேலும் வாழை மரக்கன்றுகள் கட்டியும், மலர் மாலை அணிவித்தும், பூசணிக்காய் உடைத்தும் வழிபடுவார்கள்.

அவர்கள் செய்யும் தொழிலுக்கு பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் பூஜை செய்வார்கள். பெரும்பாலானோர் தங்களின் வாகனங்களை கழுவி அதற்கு மாலை அணிவிப்பார்கள். ஆயுதபூஜைக்கு தேவையான பூ, பழங்கள், பொரி, அவல், வாழை மரக்கன்று உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக காலை முதல் வேலூர் நேதாஜி மார்க்கெட் பஜாருக்கு வர தொடங்கினர். இதையொட்டி லாங்குபஜார், மண்டி தெரு, மார்க்கெட் பகுதிகளில் வாழை மரக்கன்றுகள், பொரி உள்ளிட்ட ஏராளமான தற்காலிக கடைகள் வைக்கப்பட்டிருந்தன.

பொதுமக்கள் கூட்டம்

ஆயுத பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் நேதாஜி மார்க்கெட், மண்டித்தெரு, லாங்குபஜார் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு குவித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. கொரோனா தொற்றுக்கு முன்பு இருந்தது போன்று விற்பனை களைகட்டியதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களை நடக்காமல் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

ஆயுத பூஜையையொட்டி வேலூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. அதன்படி பூக்களின் விலை கிலோவில் வருமாறு:-

சாமந்தி ரூ.300 முதல் ரூ.350 வரை, புல்லட் சாமந்தி ரூ.150, மல்லி ரூ.800, முல்லை ரூ.800, கேந்தி ரூ.60 முதல் ரூ.80 வரை, ரோஜா ரூ.250, கோழிகொண்டை ரூ.60 மற்றும் வாழைத்தார் ரூ.300 முதல் 500 வரை விற்பனையானது. ஆப்பிள் (ஒரு கிலோ) ரூ.140, சாத்துக்குடி ரூ.80, மாதுளை ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டது. வாழை மரக்கன்று ஒரு ஜோடி ரூ.30 முதல் 50 வரை விற்பனை செய்யப்பட்டது. 10 வாழைக்கன்றுகள் கொண்ட ஒரு கட்டு ரூ.200-க்கும், ஒரு படி பொரி ரூ.20-க்கும், ஒரு மூட்டை பொரி ரூ.400-க்கும், பூசணிக்காய் ரூ.30 முதல் விற்பனையானது. ஒரு சில கடைகளில் பூ, பழங்களின் விலையில் சிறிய மாற்றங்கள் காணப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்