சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2023-08-11 18:30 GMT

ஆடி கடைசி வெள்ளிக்கிழமை

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இந்நிலையில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சிறுவாச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலுக்கு நேற்று காலை முதலே கூட்டம், கூட்டமாக பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். மதியம் மதுரகாளியம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பெரம்பலூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தங்கத்தேர் இழுக்கப்பட்டது

மேலும் பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல் நிறைவேற கோவிலில் மாவு இடித்து, மாவிளக்கு வைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து வேண்டுதலை துண்டு சீட்டில் எழுதி கோவில் மரங்களில் கட்டி விட்டதை காணமுடிந்தது. கோவில் முன்பு விளக்கு ஏற்றும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள வாடா விளக்கில் பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த எண்ணெய், நெய் ஆகியவற்றை ஊற்றி வேண்டுதலை நிறைவேற்றினர். இரவில் கோவில் உள்பிரகாரத்தில் உபயதாரர்கள் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர். மேலும் கோவில் வளாகத்தில் பரதநாட்டியம் நடந்தது. கோவிலில் பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பொங்கல் வைத்து வழிபாடு

வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் ராயப்பா நகர் அருகே உள்ள ராயப்பா சுவாமிக்கு வெண் பொங்கலும், செல்லியம்மனுக்கும் சர்க்கரை பொங்கலும் வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இதில் வி.களத்தூர், இனாம் அகரம் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலிலும், வெள்ளந்தாங்கியம்மன் கோவிலிலும், எடத்தெரு மாரியம்மன் கோவிலிலும் நடந்த குத்து விளக்கு பூஜைகளில் பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்