பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்

மணியனூரில் உள்ள தனியார் இரும்பு உருக்காலை விரிவாக்கம் குறித்து நடைபெற்ற பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பங்கேற்றார்.

Update: 2023-04-21 18:45 GMT

கந்தம்பாளையம்

கருத்து கேட்பு கூட்டம்

நாமக்கல் மாவட்டம் மணியனூரில் உள்ள அண்ணமார் கோவில் திருமண மண்டப வளாகத்தில் நல்லூர் கிராமத்தில் தனியார் இரும்பு உருக்காலையில் யூனிட் இரண்டில் விரிவாக்கம் குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஏற்பாட்டின் கீழ் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தனியார் இரும்பு உருக்காலையின் சார்பில் ஏற்கனவே மாதம் ஒன்றுக்கு 3,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்து வந்த நிலையில் மேலும் 1,300 மெட்ரிக் டன் உற்பத்தி கூடுதலாக மாதம் ஒன்றுக்கு மொத்தமாக 4,300 மெட்ரிக் டன் உற்பத்தி செய்வது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் விளக்கமளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆலையை சுற்றி உள்ள பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

பொதுமக்களிடம் மனு

அப்போது ஏற்கனவே உற்பத்தி உள்ள ஆலையில் உற்பத்தியின் போது நடைமுறைப்படுத்தப்படும் பரிசோதனைகள் சரிவர இல்லாமலும், அதிகப்படியான புகை வெளியேற்றத்தினால் அருகில் குடியிருக்க முடியாமல் மூச்சுத் திணறல், கால்நடைகள் பாதிப்பு, விவசாயம் பாதிப்பு, குடிநீர் பற்றாக்குறை, மனித உடல் ரீதியாக பாதிக்கப்படும். இந்தநிலையில் கூடுதலாக உற்பத்தி செய்தால் மேலும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும், எனவே கூடுதலான உற்பத்திக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுக் கொண்டு பொதுமக்களின் கோரிக்கையை குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பி அதன்படி ஆலை விரிவாக்கம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் கூறினார்.

இக்கூட்டத்தில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் கவுசல்யா, சுற்றுச்சூழல் பொறியாளர் மணிவண்ணன், பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், இரும்பு ஆலை நிர்வாகிகள், நல்லூர் ஊர்பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்