குறுவை நடவு பணிகள் பாதிப்பு

கூலி ஆட்கள், எந்திரங்கள் பற்றாக்குறையால் குறுவை நடவு பணிகள் பாதிப்படைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2023-06-19 18:45 GMT

சீர்காழி:

கூலி ஆட்கள், எந்திரங்கள் பற்றாக்குறையால் குறுவை நடவு பணிகள் பாதிப்படைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

குறுவை நடவு பணி

சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, கடவாசல், எடமணல், அத்தியூர், அகனி, கொண்டல், அகரஎலத்தூர், ஆதமங்கலம், பெருமங்கலம், புத்தூர், கூத்தியம்பேட்டை, மாதாணம், ஓதவந்தான்குடி, ஆரப்பாக்கம், பச்சைமாதாணம், உமையாள்பதி, ஆலங்காடு, கடவாசல், சோதியக்குடி, குன்னம், பெரம்பூர், மாதிரிவேலூர், மங்கைமடம், திருவெண்காடு, கீழச்சட்டநாதபுரம், கதிராமங்கலம், திருவாலி உள்ளிட்ட ஊராட்சிகளில் மின் மோட்டாரை பயன்படுத்தி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்தி விவசாயிகள் நாற்றங்காலை தயார் செய்து வைத்துள்ளனர். ஆனால் மேற்கண்ட ஊராட்சிகளில் போதிய நடவு எந்திரம் மற்றும் நடவு செய்யும் ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். மேலும் குறுவை நாற்றின் வயது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் குறிப்பிட்ட காலத்திற்குள் நடவு செய்ய முடியாமல் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றன. இந்த ஆண்டு சீர்காழி பகுதியில் போதிய நடவு எந்திரம் கிடைக்காததாலும், இதேபோல் அனைத்து ஊராட்சிகளிலும் தற்பொழுது 100 நாள் பணி நடைபெறுவதால் குறுவை நடவு செய்வதற்கு ஆட்கள் வராததால் விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகின்றனர்.

100 நாள் வேலை..

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கொண்டல் கல்யாணம் கூறுகையில், இந்த ஆண்டு விவசாயிகள் கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்தி குறுவை நாற்றங்கால் தயார் செய்து வைத்துள்ளனர். நடவு செய்வதற்கு போதிய நடவு எந்திரம் கிடைக்கவில்லை. மேலும் தற்போது அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை நடைபெறுவதால் நடவு செய்வதற்கு ஆட்கள் வர மறுக்கின்றனர். மேலும் தற்பொழுது கோடை பயிரான பருத்தி சாகுபடி செய்து பருத்தி வெடித்து வருகிறது. வெடித்த பருத்தியை எடுக்க ஆள் கிடைக்காமல் செடியிலேயே பருத்திகள் வீணாகி வருகிறது.

எனவே அரசு குறுவை நடவு செய்வதற்கு சீர்காழி தாலுகா முழுவதும் 15 முதல் ஒரு மாதம் 100 நாள் பணியினை நிறுத்த வேண்டும் அல்லது 100 நாள் வேலை திட்டத்தில் அரசு நடவு பணி செய்ய மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி என்பது கேள்விக்குறியாகிவிடும். இதேநிலை தொடர்ந்தால் வரும் ஆண்டு குறுவை சாகுபடி செய்ய விவசாயிகள் முன் வர மாட்டார்கள் என வேதனையோடு தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்