குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு

குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று தஞ்சையில் வேளாண்மைத்துறை இயக்குனர் அண்ணாதுரை கூறினார்.

Update: 2022-07-03 20:42 GMT
தஞ்சை மாவட்டத்தில் குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக வேளாண் அலுவலர்கள் மற்றும் விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம் தஞ்சை காட்டுத்தோட்டத்தில் உள்ள வேளாண் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின் வரவேற்றார். கூட்டத்தில் வேளாண்மைத்துறை இயக்குனர் அண்ணாதுரை கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் விவசாயிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். இதில் வேளாண் அலுவலர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வேளாண் இயக்குனர் பேட்டி

கூட்டம் முடிந்த பின்னர் வேளாண் இயக்குனர் அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் நடப்பு குறுவை பருவத்தில், தொகுப்பு திட்டம் எவ்வாறு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஒரு ஏக்கருக்கு உரிய உரங்கள், அதன் அளவுகள், விதை விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுவை பருவத்தில் இந்தாண்டு சிறப்பு திட்டமாக மாற்றுப் பயிர்களை பயிரிட 22 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், உளுந்து, எண்ணெய் வித்துக்கள், சிறுதானிய விதைகள் வழங்குவது குறித்தும் விவசாயிகளிடம் கூறப்பட்டது.விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கிராமங்களில் சிட்டா, அடங்கல் பெற ஒவ்வொரு கிராமங்களிலும் குறுவை தொகுப்பு திட்ட சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும்.

ஒரு வாரத்தில் பயிர் காப்பீடு அறிவிப்பு

தமிழகத்தில் 65 ஆயிரம் மெட்ரிக் டன் அளவில் யூரியா இருப்பில் உள்ளது. டி.ஏ.பி. தேவையான அளவு கை இருப்பு உள்ளது. உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. டெல்டா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் 13 ஆயிரம் பேர் இதுவரை பதிவு செய்துள்ளனர். 1,600 பேர் அதற்கான ஆணைய பெற்றுள்ளனர்.குறுவைக்கு பயிர் காப்பீடு தொடர்பாக தமிழக அரசு சார்பில், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தம் கோரப்பட்டு, அது தொடர்பான அறிக்கைகள் ஒரு வாரத்தில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, ஒரு வாரத்தில் அதற்குண்டான அறிவிப்புகள் வெளியாகும்.

2.30 லட்சம் ஏக்கரில் சாகுபடி

கடந்த ஆண்டில், 4 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர், அதாவது 46 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்தாண்டு 5 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்து சாதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதைவிட கூடுதலாகவும் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், தண்ணீர் கடைமடை வரை சென்றுள்ளது.டெல்டா மாவட்டங்களில் குறுவைக்கு 5.20 லட்சம் ஏக்கரில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 2 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி பணிகள் நிறைவடைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்