பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் மீனவர் வலையில் முதலைக்குட்டி சிக்கியது

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் மீனவர் வலையில் முதலைக்குட்டி சிக்கியது

Update: 2022-09-01 18:10 GMT

பள்ளிபாளையம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று பள்ளிபாளையத்தை அடுத்த ஆவத்திபாளையத்தில் மீனவர்கள் சிலர் மீன்களை பிடிக்க காவிரி ஆற்றில் வலை விரித்து வைத்திருந்தனர். மாலை அந்த வலையை எடுத்து மீன்களை சேகரித்து கொண்டிருந்தனர். அப்போது வலையில் முதலைக்குட்டி ஒன்று நெளிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் திருச்செங்கோடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் விரைந்து சென்று, முதலைக்குட்டியை மீட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக முதலைக்குட்டி தண்ணீரில் அடித்து வரப்பட்டிருக்கலாம். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றனர். பின்னர் அதனை வனத்துறையினர் திருச்செங்கோடுக்கு கொண்டு சென்றனர். காவிரி ஆற்றில் முதலைக்குட்டி சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்