திருப்பூர்
திருப்பூர் அருகே சொந்த இடத்தில் கிறிஸ்தவ சபை கட்டிடம் கட்ட அனுமதி வழங்குவதில் தாமதம் செய்வதை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் கிறிஸ்தவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். தங்களுடைய ஆதார் கார்டை ஒப்படைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்ணா
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.
இந்தநிலையில் மண்ணரை பகுதியை சேர்ந்த அருண் அந்தோணி தலைமையில் கிறிஸ்தவ சபை மக்கள் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் கூட்ட அரங்குக்கு முன் உள்ள வராண்டாவில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் பற்றி அறிந்ததும் அங்கு வந்த வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
சபை கட்ட அனுமதி மறுப்பு
அப்போது அருண் அந்தோணி கூறியதாவது:-
நான் பெத்தேல் ஏ.ஜி.சபையை நடத்தி வருகிறேன். சபை போதகராக உள்ளேன். சபைக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 2021-ம் ஆண்டு ஊத்துக்குளி ரோடு சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் சொந்தமாக 9½ சென்ட் இடம் வாங்கி சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணி தொடங்கினேன். அப்போது ஒரு சிலர், சபை கட்டுமான பணி நடந்த இடத்துக்குள் அத்துமீறி நுழைந்து பணிகளை தடுத்ததுடன், அருகில் இருந்த அரசுக்கு சொந்தமான இடத்தில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்தனர்.
இதையடுத்து ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சொந்த இடத்தில் சபை கட்டுவதற்கு அனுமதிக்கக்கோரி கடந்த ஒரு வருடமாக கலெக்டர், வருவாய்த்துறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தேன். இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. உரிய பதிலும் கொடுக்கவில்லை. சொந்த இடத்தில் திருச்சபை கட்ட தொடர்ந்து அனுமதி மறுப்பதை கண்டித்து எங்களுடைய ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கிறோம்' என்றார்.
தர்ணாவை தொடர்ந்தனர்
பின்னர் போலீசார் அவர்களை மனு கொடுக்க அழைத்துச்சென்றனர். மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனுவுடன் சபை மக்களின் ஆதார் கார்டுகளை ஒப்படைக்க முயன்றனர். ஆனால் மாவட்ட வருவாய் அதிகாரி அவற்றை வாங்கவில்லை. உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும் அரசு நிலத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை அகற்ற ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதால் அப்புறப்படுத்த, வருவாய்த்துறை, காவல்துறை நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
இருப்பினும் சபை கட்ட அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் வேறு இடத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கிறிஸ்தவ மக்கள் கலெக்டர் அலுவலகம் முன் மதியத்துக்கு மேலும் தர்ணாவை தொடர்ந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.