தூத்துக்குடியில் ஆம்னி பஸ் மீது பெட்ரோல் குண்டுவீசிய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்
தூத்துக்குடியில் ஆம்னி பஸ் மீது பெட்ரோல் குண்டுவீசிய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் ஆம்னி பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெட்ரோல் குண்டு
தூத்துக்குடியை சேர்ந்த பா.ஜனதா கட்சி ஓ.பி.சி. அணி மாநில துணைத்தலைவர் விவேகம் ரமேஷ். இவரது ஆம்னி பஸ் மீது கடந்த மாதம் 25-ந் தேதி மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டு வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பு ரோட்டில் விழுந்து பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் பதற்றம் அடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மாநகரின் முக்கிய பகுதிகளில் உள்ள 40 கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். ஆனால் இதுவரை எந்தவித தடயமும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் கோவை கார்குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து உள்ளநிலையில் தூத்துக்குடியில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நடவடிக்கை
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் கேட்ட போது, ஆம்னி பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். இதுவரை எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. விரைவில் குற்றவாளிகள் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.