செல்போன் திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும்

செல்போன் திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு டி.ஐ.ஜி. முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-03-29 17:25 GMT

குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி. முத்துசாமி உத்தரவிட்டார். மேலும் சில மனுக்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

செல்போன் திருட்டு

வேலூரை சேர்ந்த கமலேஷ் என்பவர் வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு கடந்த ஜனவரி மாதம் வந்தபோது எனது செல்போன் திருடப்பட்டு விட்டது. இதுதொடர்பாக வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தேன். நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனது செல்போனை மீட்டுத்தர வேண்டும் என்று கூறி மனு அளித்தார். பின்னர் டி.ஐ.ஜி. முத்துசாமி போலீசாரிடம் கூறுகையில், கமலேஷ் மனு மீது விசாரணை செய்யப்பட்டதா?, கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டதா?, யார் ஆய்வு செய்தார்? என்ற கேள்விகளை கேட்டார். அப்போது அதற்கு போலீசார் முறையாக பதில் அளிக்கவில்லை.

டி.ஐ.ஜி. முத்துசாமி கூறும்போது, செல்போன் அனைவரது வாழ்விலும் முக்கியமாகி விட்டது. செல்போன் இல்லாமல் செயல்படுவது கடினமாகி விட்டது. செல்போன் தொலைந்து போனால் மிகவும் சிரமாக இருக்கும். சாதாரண திருட்டு என்று எளிதில் விட்டு விடக்கூடாது. திருடிய நபர்களை கண்டறிந்து செல்போனை மீட்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

புறக்காவல் நிலையம்

மேலும் அவர், எத்தனை செல்போன் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது?, புதிய பஸ் நிலைய பகுதியில் எத்தனை கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது? என்று போலீசாரிடம் கேட்டார். அதற்கு கடந்த 3 மாதங்களில் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 32 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பேசிய டி.ஐ.ஜி. முத்துசாமி, செல்போன் திருட்டு வழக்குகளை சைபர் கிரைம் போலீசார் விரைந்து கண்டுபிடிக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர் வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமானவர்கள் வருகின்றனர். அங்கு புறக்காவல் நிலையம் அமைத்து 24 மணி நேரமும் போலீசார் பணியில் இருக்க வேண்டும். அங்கு பொதுமக்கள் அறியும் வகையில் குற்றவாளிகளின் புகைப்படங்கள் பேனராக வைக்க வேண்டும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்