அரசு ஊழியர்கள் மீதான குற்ற வழக்கும், துறை ரீதியான நடவடிக்கையும் ஒரே நேரத்தில் நடத்தலாம் - தமிழக அரசு அனுமதி

கோர்ட்டில் பிறப்பிக்கப்படும் விடுதலை தீர்ப்பு, துறை ரீதியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை முடிவை பாதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-15 18:04 GMT

சென்னை,

முறைகேடுகளில் ஈடுபட்டு கோர்ட்டில் வழக்கை எதிர்கொள்ளும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்துள்ளது. அதன்படி அரசு ஊழியர் செய்யும் முறைகேடு தொடர்பான குற்ற வழக்கும், துறை ரீதியான நடவடிக்கையும் ஒரே நேரத்தில் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்காக ஆஜராகாவிட்டாலோ, விசாரணைக்கு கீழ்ப்படிய மறுத்தாலோ இடைக்கால பணிநீக்க உத்தரவை பிறப்பிக்கலாம் என்றும், விசாரிக்கும் அதிகாரி கூறும் இடத்தில் தங்கியிருக்காவிட்டால் சம்பளமும் வழங்க தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அளவுக்குள் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு தண்டனை விதிக்கப்பட வேண்டும். குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால், குற்றவழக்கு தொடர்ந்துள்ள லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுடன் கலந்தாசித்து முடிவெடுக்க வேண்டும்.

டிஸ்மிஸ் போன்ற முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தால், குற்ற வழக்கு விசாரணை முடியும் வரை அந்த முடிவை நிறுத்தி வைக்கலாம். குற்றவாளி இல்லை என்று கோர்ட் தீர்ப்பளித்துவிட்டால், அரசு ஊழியர் ஒழுங்கு விதியின் கீழ் விசாரிக்க முடியாது என்று எடுத்துக்கொள்ள கூடாது.

கோர்ட்டில் பிறப்பிக்கப்படும் விடுதலை தீர்ப்பு, துறை ரீதியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை முடிவை பாதிக்காது. முறைகேடு செய்த அரசு ஊழியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்த பொறுப்பில் உள்ள அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்