கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கொடி ஏற்றுவதை தடுத்தால் கிரிமினல் நடவடிக்கை; கலெக்டர் உத்தரவு

கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கொடி ஏற்றுவதை தடுத்தால் கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-08-10 15:54 GMT

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

75 -வது சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி தென்காசி மாவட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட உள்ளது. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி தலைவர்களால் மட்டுமே தேசியக்கொடி ஏற்றப்பட வேண்டும்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினராக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி தலைவர் தேசிய கொடி ஏற்றுவதை யாரேனும் தடுக்கும் விதமாக செயல்பட்டால் உடனடியாக தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக தொலைபேசி எண் 1077-ல் புகார் அளிக்க சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினராக உள்ள கிராம ஊராட்சி தலைவர்கள் சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றுவதை தடுக்கும் விதமாக யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்