வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
*திருச்சி கீழரண் சாலை நாகசுந்தரம் நகரை சேர்ந்தவர் விஜய் (வயது 32). இவருக்கும் இவருடைய மைத்துனரின் மனைவி மீனாவுக்கும் சொத்து தகராறு இருந்து வருகிறது. இந்தநிலையில் முன்விரோதம் காரணமாக மீனா மற்றும் அவருடைய உறவினர்கள் சேர்ந்து விஜய் வீட்டுக்கு வந்து அவரை திட்டி, மரக்கட்டையால் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், மீனா உள்பட 4 பேர் மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜேப்படி செய்த 3 பேர் கைது
*திருவெறும்பூர் வடக்கு வீதியை சேர்ந்தவர் அசோக் (35). இவர் திருச்சி மத்திய பஸ்நிலையத்தில் தஞ்சாவூர் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறிய போது, 3 பேர் இவருடைய சட்டைப்பையில் இருந்து ரூ.600-ஐ ஜேப்படி செய்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட அவர், அக்கம், பக்கத்தினர் உதவியுடன் 3 பேரையும் மடக்கிப்பிடித்து திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் அவர்கள், மணப்பாறையை சேர்ந்த கந்தசாமி (39), திருப்பத்தூரை சேர்ந்த நாகராஜ் (28), திருச்சி பாலக்கரையை சேர்ந்த கணேஷ் (28) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
*திருச்சி பாலக்கரை கேம்ஸ்டவுன் பகுதியை சேர்ந்தவர் சந்தியாகு மார்ட்டின் (31). இவர் சாலைரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வரவேற்பாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று நள்ளிரவு இவர் தனது மோட்டார் சைக்கிளை ஓட்டலில் நிறுத்தி இருந்தார். காலையில் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதை யாரோ திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கஞ்சா விற்ற 10 பேர் கைது
*திருச்சி மாநகரில் எடமலைப்பட்டி புதூர், விமானநிலையம், ஸ்ரீரங்கம், கோட்டை, காந்திமார்க்கெட், பாலக்கரை, உறையூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்றதாக 10 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் 765 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பணம் வைத்து சூதாட்டம்
*திருச்சி ரெட்டமலை சாலை, பட்டத்தம்மாள் வீதி, கீழரண் சாலை, தில்லைநகர், உறையூர் ஆகிய பகுதிகளில் பணம் வைத்து சூதாடியதாக 14 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.560-ஐ பறிமுதல் செய்தனர்.
லாட்டரி சீட்டு விற்றவர் சிக்கினார்
*திருச்சி உறையூர் நவாப்தோட்டம் பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்றதாக பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஜெகதீசன் (32) என்பவரை உறையூர் போலீசார் கைது செய்தனர்.
பணம் பறித்த ரவுடி கைது
*திருச்சி தேவதானம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (37). டாஸ்மாக் ஊழியரான இவர் தேவதானம் சந்திப்பில் நின்று கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த குணா (33) என்ற ரவுடி கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.500-ஐ பறித்துச்சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குணாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண் மாயம்
*முசிறியை அடுத்த காமாட்சி பட்டியை சேர்ந்த சின்ன தம்பி மகன் பிச்சை (77). இவருடைய மகள் ரமா (17). சம்பவத்தன்று வெளியே சென்று வருவதாக கூறி சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.