திருச்சி குட்ஷெட் யார்டுக்கு நேற்று ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து 18 வேகன்களில் இரும்புபிளேட்டுகள் வந்தன.அவற்றை 2 கிரேன்களின் உதவியுடன் ராட்சத லாரிகளில் ஏற்றும் பணி நேற்று இரவு 8 மணி அளவில் நடைபெற்றது. அப்போது எதிர்பாரதவிதமாக 2 கிரேன்களில் ஒன்று திடீரென கவிழ்ந்தது. இதில் கிரேனை இயக்கி வந்த விமானநிலைய பகுதியை சேர்ந்த மணிகண்டன் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அங்கு வேலை பார்த்து கொண்டு இருந்த தொழிலாளர்களும் காயமின்றி தப்பினர். சம்பவ இடத்துக்கு ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து விபத்து நடந்தது எப்படி? என விசாரணை நடத்தினார்கள். இது குறித்து ஒரு சில தொழிலாளர்கள் கூறும்போது, குட்ஷெட் யார்டுக்கு வரும் சரக்குகளை இறக்கி, ஏற்றும் பணி எந்நேரமும் நடைபெற்று வருகிறது. ஆனால் இங்கு போதுமான வெளிச்சம் இல்லை. உயர்கோபுர மின்விளக்கு அமைத்து தரக்கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.மேலும், குட்ஷெட் யார்டு சாலை குண்டும், குழியுமாக உள்ளது.இதில் பல டன் எடை கொண்ட இரும்புபிளேட்டுகளை கிரேனில் தூக்கும்போது, கிரேன் சக்கரங்கள் பள்ளத்தில் இறங்கினால் கட்டுப்பாட்டை இழந்துவிடும். ஆகையால் இங்கு சாலையை சீரமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். இந்த சம்பவம் நேற்று இரவு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.