தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க 5-வது ஆண்டாக தொடரும் நேர கட்டுப்பாட்டுக்கு மக்கள் ஆதரவும், எதிர்ப்பும்!

தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்க 5-வது ஆண்டாக தொடரும் நேர கட்டுப்பாட்டுக்கு மக்களிடம் ஆதரவும், எதிர்ப்பும் நிலவுகிறது.

Update: 2022-10-13 18:45 GMT

தீபாவளி பட்டாசு

தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, எண்ணெய் குளியல், பலகாரம், பட்டாசு ஆகிய நான்கும் முக்கிய அங்கம் பெறுகிறது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலான மக்கள் பட்டாசுகளை வெடிப்பதிலும், விதவிதமாக வெடிப்பதை வேடிக்கை பார்ப்பதிலும் மகிழ்ச்சி அடைவார்கள். இதனால் தீபாவளி நாளில் எல்லா திசைகளிலும் வெடிச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.

இந்த கொண்டாட்டம் ஒருபுறம் என்றாலும் அதிக அளவில் பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலைப்பட்டு வந்தனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகை அன்று பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழலுக்கு தீங்கு உண்டாகிறது என்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது.

நேர கட்டுப்பாடு

அந்த தீர்ப்பில், பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிப்பதற்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதன்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரை ஒரு மணி நேரமும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒரு மணி நேரமும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில், கடந்த ஆண்டுகளை போன்று இந்த ஆண்டும் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

5-வது ஆண்டாக இந்த ஆண்டும் நேர கட்டுப்பாட்டுடன் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் கட்டுப்பாடு இருந்த போதிலும் பலரும் கட்டுப்பாடுகளை மீறி பட்டாசுகளை வெடித்தனர். போலீசார் ரோந்து வரும் போது வீடுகளுக்குள் ஓடி பதுங்கிக் கொண்டும், போலீசார் சென்றவுடன் வீதிக்கு வந்து பட்டாசு வெடிப்பதுமாக இளைஞர்கள் பலர் தீபாவளியை கொண்டாடினர்.

கட்டுப்பாட்டை நீக்க வேண்டும்

இந்த நேர கட்டுப்பாட்டுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும், எதிர்ப்பும் நிலவுகிறது. குறிப்பாக வியாபாரிகள் மத்தியில் இந்த நேர கட்டுப்பாட்டை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்படுகிறது.

இதுதொடர்பாக தேனியை சேர்ந்த பட்டாசு வியாபாரி ரவிச்சந்திரன் கூறுகையில், "பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாட்டை முழுமையாக நீக்க வேண்டும். தீபாவளி என்றாலே அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து பட்டாசு வெடிப்பது கலாசாரம். எண்ணற்ற தொழிற்சாலைகள் 365 நாட்களிலும் நச்சுப் புகையை வெளியிட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. அதோடு ஒப்பிடும் போது ஒருநாள் கொண்டாட்டத்துக்கு பட்டாசு வெடிப்பதால் பாதிப்பு என்று சொல்வதை ஏற்க முடியவில்லை.

இந்த ஒரு நாள் கொண்டாட்டம் என்பது, ஆண்டு முழுவதும் சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் கஷ்டப்படும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சார்ந்தது. தடைக்கு மாற்றாக பசுமை பட்டாசுகள் உற்பத்தியை இன்னும் அதிகரிக்கலாம். பட்டாசு வெடிப்பதால் குழந்தைகளிடம் பயம் உணர்வு நீங்கும். மழைக்காலங்களில் கொசுத் தொல்லையை கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது" என்றார்.

பசுமை தீபாவளி

முத்துதேவன்பட்டியை சேர்ந்த மருத்துவ ஊழியர் ராமர் கூறுகையில், "பட்டாசு வெடித்து பல நூற்றாண்டுகளாக தீபாவளி கொண்டாடப்பட்டுள்ளது. பண்டிகைகளோடு இணைந்த பழக்க வழக்கங்கள் காலத்துக்கு ஏற்ப மாறுபட்டுள்ளது. ஆடை, உணவு பழக்கம் போன்றவற்றிலும் பல மாற்றங்கள் வந்துள்ளன. தற்போதைய சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருதி இந்த நேரம் கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. இது காலத்தின் தேவை. இப்படி கட்டுப்பாடு வரவில்லை என்றால் வரும் காலங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது" என்றார்.

உத்தமபாளையத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் செந்தில்குமார் கூறுகையில், "தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பதற்கு மாற்றாக மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை கடந்த சில ஆண்டுகளாக செய்து வருகிறோம். இந்த உலகம் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் வளமோடு இருக்க வேண்டும் என்றால் இருக்கும் வளங்களை பாதுகாக்கவும், இயற்கை வளங்களை மேம்படுத்தவும் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். கட்டுப்பாடு இருந்தாலும் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த மக்களும் அதிக அளவில் பட்டாசு வெடித்தால் காற்று மாசு இன்னும் அதிகரிக்கத் தான் செய்யும். எனவே மக்களிடம் சுய கட்டுப்பாடு வர வேண்டும். பசுமையான தீபாவளியை கொண்டாட மக்கள் ஆர்வத்துடன் முன்வர வேண்டும்" என்றார்.

மரக்கன்று நட வேண்டும்

உத்தமபாளையத்தை சேர்ந்த ஆசிரியர் செல்வகுமார் கூறுகையில், "பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு என்பது நல்ல விஷயம். இயற்கையை பாதுகாத்து, சுற்றுச்சூழலை மேம்படுத்த வேண்டிய கடமை ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளது. இன்றும் பறவைகளுக்காக வெடி வெடிக்காத கிராமங்கள் நிறைய உள்ளன. அரசு விதித்த நேர கட்டுப்பாட்டை மக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை தவிர்க்க வேண்டும்.

பசுமை பட்டாசுகளை மக்கள் கேட்டு வாங்கி பயன்படுத்த தொடங்கினால் தான் வரும் காலங்களில் அவற்றின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு வெடிக்க காட்டும் ஆர்வத்தை மரக்கன்றுகள் நடுவதிலும், வளர்ந்த மரங்களை பாதுகாப்பதிலும் காட்டினால் பசுமையான சூழல் மேம்பாடும். பசுமையான சுற்றுச்சூழல் மேம்பாட்டால் மட்டுமே எதிர்காலங்களில் இந்த நேரம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்புள்ளது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்