சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள் கோசாலையில் அடைப்பு
பட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளைப் பிடித்து நகராட்சி நிர்வாகத்தினர் கோசாலையில் அடைத்தனர்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளைப் பிடித்து நகராட்சி நிர்வாகத்தினர் கோசாலையில் அடைத்தனர்.
போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்
பட்டுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சாலைகளில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிந்தன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இது குறித்து பொதுமக்களிடம் இருந்து நகராட்சி ஆணையருக்கு பலமுறை புகார் வந்த வண்ணம் இருந்தது.
அதே நேரத்தில் நகராட்சி கூட்டங்களிலும் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரியக்கூடிய மாடுகளை பிடிக்க வேண்டும் என நகராட்சி கவுன்சிலர்களும் வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் குமரன் மாடுகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தார்.
விடிய, விடிய...
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் விடிய, விடிய பட்டுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் சுகாதார அலுவலர் நெடுமாறன், சுகாதார ஆய்வாளர் அறிவழகன் ஆகியோர் தலைமையில் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு பஸ் நிலையம், நாடியம்மன் கோவில் சாலை, செட்டித்தெரு, பிள்ளையார் கோவில் தெரு, வடசேரி ரோடு, அறந்தாங்கி ரோடு முக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் கயிறு மூலமாக பிடித்து வாகனங்களில் ஏற்றினர். இதில் பிடிபட்ட 17 மாடுகளையும் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் நாடியம் கோசுவாமி மடத்தில் உள்ள கோசாலையில் நகராட்சி நிர்வாகத்தினர் அடைத்தனர்.
இதுகுறித்து சுகாதார அலுவலர் நெடுமாறன் கூறுகையில், நகராட்சி பகுதிகளில் இரவு முழுவதும் விடிய விடிய போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்துள்ளோம். இந்த நடவடிக்கை தொடர்ந்து நடத்தப்படும். அதே சமயத்தில் மாட்டின் உரிமையாளர்கள் தங்களது சொந்த பொறுப்பிலேயே தொழுவத்தில் வைத்து மாடுகளை பராமரித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார்.